அமைச்சர் உதவியாளர் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

உடுமலை: உடுமலையில் அமைச்சரின் உதவியாளர் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது ெசய்துள்ளனர். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருப்பவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன். இவரது சட்டமன்ற தொகுதி அலுவலகம் உடுமலையில் உள்ளது. அமைச்சரிடம் உதவியாளராக இருந்த கர்ணன் கடந்த செப்டம்பர் 23ம் தேதி சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

அவரை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள், தளி காவல் நிலைய எல்லை பகுதியில் கர்ணனை இறக்கி விட்டு சென்றனர். அங்கிருந்து நடந்து வந்த கர்ணன், தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, பட்டப்பகலில் அமைச்சரின் அலுவலகத்துக்குள் புகுந்து உதவியாளரை கடத்திய மர்ம நபர்களை பிடிக்க திருப்பூர் மாவட்ட எஸ்பி. திஷா மிட்டல் உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

இதில் பிரதீப், அருண்குமார், சுரேந்திரன், வினோத் குமார், தேவராஜ், ஷேக் அஹமது, செல்வ கணபதி ஆகிய 6 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரகுவை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை பூலாங்கிணறு பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த ரகுவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Related Stories:

>