×

காலவரையற்ற ஸ்டிரைக்கிற்கு ஆதரவாக லாரிகளுக்கான சரக்கு ‘புக்கிங்’ 26ம் தேதி முதல் நிறுத்தம்: ஏஜென்டுகள் சம்மேளன தலைவர் அறிவிப்பு

சேலம்: காலவரையற்ற லாரி ஸ்டிரைக்கிற்கு ஆதரவாக, சரக்கு புக்கிங் வரும் 26ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது என தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்டுகள் சம்மேளன தலைவர் தெரிவித்துள்ளார். வேக கட்டுப்பாட்டு, ஜிபிஎஸ் கருவிகளை குறிப்பிட்ட சில நிறுவனங்களில் வாங்க நிர்ப்பந்திக்க கூடாது, காலாண்டு வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27ம் தேதி முதல் தமிழகத்தில் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை  மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம்  அறிவித்துள்ளது.

இதற்கு தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்டுகள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்டுகள் சம்மேளன தலைவர் ராஜவடிவேலு சேலத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் வரும் 27ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதற்கு ஆதரவாக வரும் 26ம் தேதி முதலே முழு லோடு, சில்லரை லோடு ஏற்றுவது நிறுத்தப்படும்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 5,250க்கும் மேற்பட்ட புக்கிங் ஏஜென்டுகள் சரக்கு புக்கிங்கை செய்யமாட்டார்கள். இதனால், ஜவுளி, இரும்பு, தானிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடையும். தினமும் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் தேங்கும். டீசல் விலை உயர்ந்ததால் வாடகை நிர்ணயம் செய்ய முடியாமல் தினமும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, மத்திய, மாநில அரசு டீசல் விலையை 3 மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும். லாரிகள் மீது ஆன்லைன் அபராதத்தை நிறுத்த வேண்டும். இதுபற்றி சம்மேளன நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி அரசு தீர்வு காண வேண்டும் என்றார்.


Tags : strike ,halt ,President Announcement ,Agents Association , Freight 'booking' for lorries in support of indefinite strike halts from 26th: Agents' Federation President Announcement
× RELATED வடக்கன்குளம் எஸ்ஏவி பள்ளியில் திருவாசகம் முற்றோதுதல்