×

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமைச் செயலாளராக பணியாற்றிய கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணத்துவ உறுப்பினர் பணியிடங்களை நிரப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.  கடந்த 12ம் தேதி தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் ஆக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகிய மூவரை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்ய மத்திய அமைச்சரவையின் பணி நியமன குழு ஒப்புதல் அளித்திருந்தது.

 இந்நிலையில், கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனுவில், தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5ன் படி  நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும் அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும்.

 கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும் சுற்றுச்சூழல்  சார்ந்த பணிகளின் அனுபவம் ஐந்து ஆண்டுகளுக்கு இல்லை.  குறிப்பாக 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே அவர் சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். எனவே, இவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. அதனால், கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


Tags : Kirija Vaithiyanathan ,National Green Tribunal: Trial , Case against the appointment of Kirija Vaithiyanathan as a member of the National Green Tribunal: Soon hearing in the iCourt
× RELATED தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்...