×

அனைத்து கீழமை நீதிமன்றங்களும் ஜனவரி 18 முதல் வழக்கம்போல் செயல்படும்: ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களும் ஜனவரி 18 முதல் வழக்கம்போல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் செயல்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அறிவித்துள்ளார். இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஆர்.பூர்ணிமா (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டன. தற்போது, அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம்போல் செயல்பட ஆரம்பித்துள்ளன. இதையடுத்து, கடந்த 12ம் தேதி நடந்த உயர் நீதிமன்ற நிர்வாக குழு கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் ஜனவரி 18 முதல் வழக்கம்போல் விசாரணையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை நடத்த விரும்புபவர்கள் அதற்கேற்றபடி சம்மந்தப்பட்ட நீதிமன்றங்களை அணுகலாம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உரிய முறையில் கடைபிடிக்கப்பட்டு கீழமை நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், சிறுவழக்குகள் நீதிமன்ற தலைமை நீதிபதி, புதுச்சேரி மற்றும் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதிகள் உரிய முடிவை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : courts ,Registrar General ,ICC , All lower courts will function as usual from January 18: Notice to the Registrar General of the ICC
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...