×

இரவு கிளப்பில் போதை விருந்து 13 பெண்களுடன் சுரேஷ் ரெய்னா கைது : மும்பை போலீசார் அதிரடி

மும்பை: இரவு கிளப்பில் பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஹ்ருதிக் ரோஷனின் முன்னாள் மனைவியும், பாலிவுட் ஆடை வடிவமைப்பாளருமான சூசன் கான் உட்பட 34 பேரை, கொரோனா விதிமுறைகளை  மீறியதாக மும்பை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிராவில் ஜனவரியில் கொரோனா 2வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்த மகாராஷ்டிரா அரசு, கொரோன பரிசோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதுபோல் இரவு நேர கிளப்களிலும் அதிரடி ரெய்டுகள்  நடத்தி வருகிறது. இந்நிலையில், அந்தேரியில் மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஒரு கிளப்பில் மும்பை போலீசார் அதிகாலை 3 மணிக்கு திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது அந்த கிளப் பில் போதை விருந்தில் உற்சாகத்தில்  மிதந்து கொண்டிருந்த பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஹ்ருதிக் ரோஷனின் முன்னாள் மனைவியும், பாலிவுட் ஆடை வடிவமைப்பாளருமான சூசன் கான், பாடகர் மற்றும் கிளப் ஊழியர்கள் உட்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட 34 பேரில், 13 பேர் பெண்கள்.

 இதுகுறித்து மும்பை போலீசார் கூறுகையில், ‘‘ கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி விதிகள் கடைப்பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால்தான் இதுபோன்ற இரவு கிளப்களில் அவ்வப்போது ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன.  கைது செய்யப்பட்டவர்கள் மீது கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மேலும், பொதுப்பணியாளரால் முறைப்படி பிரகடனம் செய்யப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாதது, உயிருக்கு ஆபத்தான தொற்று நோயை பரப்பக்கூடிய கவனக்குறைவான செயலில் ஈடுபடுதல், கூட்டு நோக்கம், சமூக விலகலை பின்பற்றாதது,  முகக்கவசம் அணியாதது என இந்திய தண்டனை சட்டம் 188, 269 மற்றும் 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழும், கொரோனா தடுப்பு விதிமுறைகளின்படியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  பெண்கள் அனைவரும் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ்  கேட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஆண்கள் கைது செய்யப்பட்ட பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  இதற்கிடையில், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக சுரேஷ் ரெய்னா சார்பில் விளக்க அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது அதில், ‘சினிமா பட  ஷூட்டிங்கிற்காக சுரேஷ் ரெய்னா மும்பையில் இருந்தார். ஷூட்டிங் இரவு வெகுநேரம் நீடித்தது. பின்னர், அவர் விமானத்தில் டெல்லி திரும்புவதற்கு முன்பாக, இரவு உணவு விருந்துக்கு நண்பர்கள் அழைத்திருந்தனர். அதற்காகவே அவர்  சென்றிருந்தார். உள்ளூர் நேர கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. இதுகுறித்து சுட்டிக்காட்டியதும், உடனடியாக அவற்றை பின்பற்றினார்.அதோடு, இந்த சம்பவத்துக்காக அவர் மிகவும் வருந்தினார்’ என  கூறப்பட்டுள்ளது.

Tags : Suresh Raina ,women ,nightclub party ,police action ,Mumbai , Suresh Raina arrested with 13 women at nightclub party: Mumbai police action
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...