26ம் தேதி மண்டல பூஜை சபரிமலை புறப்பட்டது தங்க அங்கி ஊர்வலம்: 25ல் சன்னிதானம் அடையும்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக  தங்க அங்கி ஊர்வலம் நேற்று காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. சபரிமலை  ஐயப்பன் கோயிலில் வரும் 26ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது. அப்போது, ஐயப்பனுக்கு 453 பவுன் எடையிலான தங்க அங்கி அணிவித்து  சிறப்பு பூஜை நடைபெறும். நேற்று காலை 7 மணிக்கு ஆரன்முளா  பார்த்த சாரதி  கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம்  செல்லும் வழிகளில் பக்தர்கள் வரவேற்பு அளிப்பது வழக்கம். தற்போது, கொரோனா கட்டுப்பாடுகள்  காரணமாக, இதற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,  சபரிமலை செல்லும் வழியில் இரவு தங்கும் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் கூட  தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்க அங்கி ஊர்வலம் 25ம் தேதி மதியம் பம்பை வந்து  சேரும். அங்கு, தேவஸ்தான ஊழியர்கள் அதை பெற்றுக்  கொள்வார்கள்.

பின்னர், அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க சன்னிதானத்திற்கு  கொண்டு வருவார்கள். இந்த தங்க அங்கியை 18ம் படிக்கு கீழ் பகுதியில்  தந்திரி மற்றும் மேல்சாந்தி பெற்றுக் கொள்வர். பின்னர், 18ம் படி  வழியாக சன்னிதானத்திற்கு அது கொண்டு செல்லப்பட்டு, மாலை 6.30  மணிக்கு ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை  நடைபெறும்.

Related Stories:

>