ஐக்கிய ஜனதா தளம் - பாஜ கூட்டணி உடையும் பீகாரில் 2021ல் மீண்டும் தேர்தல்: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி புது கணக்கு

பீகார்: பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜ கூட்டணி உடையும் என்பதால், 2021ல் மீண்டும் பேரவை தேர்தல் நடக்கும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி ெதரிவித்தார். சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும்  கூட்டணியான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ்  தலைமையிலான கூட்டணி சொற்ப இடங்களில் தோற்றதால் ஆட்சியமைக்க முடியவில்லை. இந்நிலையில் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்வதற்கான மறுஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அப்போது அவர் பேசுகையில், ‘வருகிற 2021ல் மீண்டும் பீகாரில் தேர்தல் நடக்கும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம். அதனால், தேர்தலை எதிர்கொள்ள  நாம் ஆயத்தமாக வேண்டும். எங்களுக்கு அனைத்து பிரிவு மக்களும் வாக்களித்தனர். சில இடங்களில் எதிரிகளின் சூழ்ச்சியால் தோற்றோம். சிலர் தங்கள் தனிப்பட்ட நலனுக்காக தேர்தல் வேலை செய்யவில்லை. அவர்கள் கட்சியின் நலனை  பற்றி கவலைப்படவில்லை.

கட்சிக்கு வெளியே எதிரியாக இருப்பவர், கட்சிக்குள் வந்துவிட்டால் அவருக்காக ஒத்துழைக்க வேண்டும். கட்சித் தொண்டர்கள் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கி போராட வேண்டும்’ என்றார். இந்நிலையில் ஆர்ஜேடி  கட்சியின் தோல்வியின் பின்னணியில் உள்ள காரணங்களை மேற்கோள் காட்டிய மூத்த தலைவர் அப்துல் பாரி சித்திகி, ‘எங்களது கட்சியின் தோல்விக்கு பின்னால் மற்றொரு காரணம் உள்ளது. அது, பெரும்பாலான வாக்குச்சாவடிகளில்  வாக்குச்சாவடி முகவர்கள் இல்லை’ என்றார்.

Related Stories:

More