×

ஆனைமலை அருகே ரேக்ளா போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆனைமலை: ஊரடங்கு தளர்வு காரணமாக ஆனைமலை அருகே ரேக்ளா ேபாட்டி நடந்தது. இதில், சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டம், ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் ரேக்ளா பந்தயம் ஆண்டுதோறும் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் ஏற்பட்டுள்ள தளர்வு காரணமாக, பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் - மணல்மேடு பகுதியில், விவசாயிகள் சார்பில் ரேக்ளா போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், வடக்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, ஏராளமான விவசாயிகள் தங்களது காளைகளுடன் பங்கேற்றனர். இரண்டு பல் காளைகள், நான்கு பல் காளைகள், ஆறு பல் காளைகள் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் உரிமையாளர்களுக்கு தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காங்கயம் இனக்காளைகளை பாதுகாக்கும் வகையிலும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், விவசாயிகளின் நண்பனான காங்கயம் இன காளைகளை கொண்டு ரேக்ளா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக தடை செய்யப்பட்டிருந்த இந்த போட்டிகள் 8 மாதங்களுக்கு பிறகு தற்போது நடைபெற்றுள்ளது. மேலும் வரும் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற உள்ள ரேக்ளா போட்டிகளுக்காக விவசாயிகள், தங்களது காளை மாடுகளை தயார் செய்து வருகின்றனர். போட்டியின்போது காளைகளை துன்புறுத்தாத வகையில், விதிமுறைகளை கடைப்பிடித்து, கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது, என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : competition ,Ragla ,Anaimalai , Bulls at the Ragla competition near Anaimalai: Public delight
× RELATED மாநில அளவிலான சிலம்ப போட்டி: கோவை வீரர்கள் அசத்தல்