வீடுகளுக்கு 10-100 ரூபாய் கட்டணம்: ஜனவரி 1-ம் தேதி முதல் சொத்து வரியுடன் குப்பை கட்டணம் செலுத்த வேண்டும்... சென்னை மாநகராட்சி அறிவிப்பு.!!!

சென்னை: சென்னையில் ஜனவரி 1-ம் தேதி முதல் சொத்து வரியுடன் சேர்த்து குப்பைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகளை முழுமையாக செயல்படுத்தும் விதமாக 19,467 பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று குப்பைகள் பெறப்பட்டு, அவை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இவ்வாறு தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளின் ஈரக் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் மற்றும் உயிரி எரிவாயு தயாரிக்கப்பட்டு வருகிறது.

உலர்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு, மறுஉபயோகம் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள குப்பைகள் தற்போது பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பெருநகர  சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை மேலும் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு மாநகராட்சிக்குட்பட்ட 7  மண்டலங்களிலும் பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 8 ஆண்டு காலத்திற்கு M/s Urbaser SA  and Sumeet Facilities limited நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையே, திடக்கழிவு மேலாண்மை விதிகளில் திருத்தம் செய்து கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையும், திருமண மண்டபங்களுக்கு 1000 ரூபாய் முதல் 10  ஆயிரம் ரூபாய் வரையும், உணவு கூடங்களுக்கு 300 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையும், அலுவலகங்களுக்கு 300 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையும், கடைகளுக்கு 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையும், விழாக்களுக்கு 5  ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இதனைபோல், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளுக்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனவரி 1ம் தேதி முதல் இந்த கட்டணத்தை சொத்து வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டுமென  சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Related Stories:

>