புதுமைதான் இந்தியாவின் சிறப்பு மரபு: சர்வதேச சிக்கல்களை தீர்ப்பதில் நமது தொழில்நுட்பம் முன்னணி..பிரதமர் மோடி பெருமிதம்.!!!

டெல்லி: அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் இந்தியாவுக்கு சிறப்பான மரபு உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஹேக்கத்தான்களை நடத்துவது, அவற்றில் கலந்து கொள்வதில் இந்தியா மிகவும் துடிப்பாக உள்ளதில் ஆச்சரியமில்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இவை நடைபெறுகின்றன. நமது விஞ்ஞானிகளுக்கு அனுபவம் மற்றும் வாய்ப்புகளை இவை வழங்குகின்றன. அறிவியல் கற்றலுக்கான மிகவும் நம்பத்தகுந்த மையமாக இந்தியாவை உருவாக்குவதை நோக்கியே எங்களின் அனைத்து முயற்சிகளும் உள்ளன என்றார்.

தொழில்நுட்பத்தை குறித்து பேசிய பிரதமர், தரமான வைஃபை-யை வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ள PM-WANI திட்டத்தை பற்றி குறிப்பிட்டார். இணையம் மூலம் அறிவியல் அறிவை பெறுவதற்கு இந்திய இளைஞர்களுக்கு இது உதவும். விஞ்ஞானிகளின் தற்போதைய மிகப்பெரிய சவால் கொரோனா தடுப்பு மருந்தாக இருக்கலாம். ஆனால் இது தற்போதைய சவால் மட்டுமே. மிகவும் திறமை வாய்ந்த இளைஞர்களை ஈர்த்து, அவர்களைத் தக்க வைத்துக் கொள்வதே மிகப்பெரிய நீண்டகால சவாலாகும்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் இந்தியாவுக்கு சிறப்பான மரபு உள்ளது. சர்வதேச சிக்கல்களை தீர்ப்பதில் நமது தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இன்னும் அதிகமாக பங்காற்ற இந்தியா விரும்புகிறது. கடந்த காலத்தைவிட சிறப்பான எதிர்காலத்தை நாம் விரும்புகிறோம். மிகவும் திறமை வாய்ந்தவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். திறந்த, வெளிப்படையான கலாச்சாரத் தன்மையை இந்தியா கொண்டாடுகிறது. எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு இங்குள்ள ஆராய்ச்சி சூழலை மேம்படுத்த இந்திய அரசு தயாராக உள்ளது.

இந்த கூட்டத்தின் மூலமாக, இந்தியா மற்றும் இந்திய திறமைகளில் முதலீடு செய்ய வருமாறும், இந்தியாவில் புதுமைகளை படைக்குமாறும் சர்வதேச சமுதாயத்திற்கு நான் அழைப்பு விடுக்கிறேன். இன்று அறிவியல் என்று அழைக்கப்படுவது நாளைய தொழில் நுட்பம் ஆகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Stories:

More