கருணையற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி : கே.பாலகிருஷ்ணன் தாக்கு

கோவை,: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோவை காந்திபுரத்தில் இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லியில் லட்சக்கணக்கில் திரண்டு போராடும் விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக மத்திய அரசு செயல்படுகிறது.  தமிழகத்தில் தங்களது ஆட்சியை காப்பாற்ற மத்திய அரசின் அனைத்து தில்லுமுல்லுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணையாக இருக்கிறார். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை பற்றி தமிழக முதல்வர் கவலைப்படவில்லை.

நான், ஒரு விவசாயி எனக்கூறிக்கொண்டு, விவசாய விரோத செயலில் ஈடுபடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத செயலை, மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், வரும் 25ம்தேதி முதல் 31ம்தேதி வரை 10 ஆயிரம் குழுக்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம்.கொரோனா ஊரடங்கு உச்சத்தில் இருந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால், முதல்வர் கண்டு கொள்ளவில்லை. அப்போது கருணையற்ற முதல்வராக இருந்தார். இப்போது, சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால், பொங்கல் பண்டிகைக்கு, மக்களுக்கு ரூ.2,500 கொடுக்கிறோம் என அறிவிப்பு வெளியிடுகிறார்.

அதிமுக கூட்டணி, கொள்கையற்ற கூட்டணி. அந்தக் கூட்டணி மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் கட்சி, தேர்தலில் ஓட்டுகளை பிரிக்கத்தான் பயன்படும். ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் இப்படித்தான் இருக்கும். அதனால்தான் அவர்களை, பா.ஜ.கவின் ‘பி’ டீம் என்கிறோம்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

Related Stories:

>