×

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் மீண்டும் களைகட்டும் முட்டுக்காடு படகு குழாம்!: மன அழுத்தத்திற்கு இதமளிக்கிறது..!!

சென்னை: சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சென்னை அருகே உள்ள முட்டுக்காடு படகு குழாம் சுறுசுறுப்பு அடைந்துள்ளது. கொரோனா பரவல் தொடங்கியதால் மூடப்பட்டு நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளுக்கு நாள்தோறும் ஏமாற்றத்தை அளித்து வந்த முட்டுக்காடு படகுத்துறை தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது. கொரோனா நடத்திய கோர தாண்டவத்தால் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்திருந்தது. அதிலும் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இயல்பு நிலை மெல்ல மெல்ல எட்டிப்பார்க்கிறது.

அதன்படி வருமானத்தை அதிகரிக்கக்கூடிய துறையாக மீண்டும் உருமாறி வருகிறது சுற்றுலாத்துறை என்பதற்கு உதாரணம் தான் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு படகு குழாம். தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான முட்டுக்காடு படகு குழாம், கடந்த மார்ச் 17ம் தேதி முதல் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. பறவைகள் மட்டும் இங்கு முகாமிட்டிருந்த நிலை மாறி, பயணிகளும் தற்போது படையெடுக்க தொடங்கியுள்ளனர். படகு சவாரி செய்ய வருவோருக்கு உயிர்காக்கும் பாதுகாப்பு கவச உடைகளுடன் கொரோனா தடுப்பிற்கான முகக்கவசங்கள் வழங்கப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது.

இதனால் நோய் தொற்றுக்கு அஞ்சி வீடுகளில் முடங்கியிருந்து மன நோய்க்கும், மன அழுத்தங்களுக்கும் ஆளாகி இருந்தவர்கள் மகிழ்ச்சியை மலர செய்வதற்காக படகு சவாரிகளில் பயணிக்க வருகின்றனர். 1984ம் ஆண்டில் இருந்து அதி அற்புதமாக செயல்பட்டு வரும் இந்த முட்டுக்காட்டு படகு குழாமில் 16 துடுப்பு படகுகளும், 23 இயந்திர படகுகளும், 4 வாட்டர் ஸ்டூட்டர்களும், 2 அதிவிரைவு படகுகளும் பவனி வந்து பயணிகளின் இதயத்திற்கு இதமளிக்கின்றன.


Tags : boat crew ,Muttukadu , Tourist, stumbling boat crew, stress
× RELATED தாய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது...