×

மயானத்திற்கு பாதை இல்லாதது ஏன்? ஐகோர்ட் கிளை தாமாக முன் வந்து விசாரணை

மதுரை: தினகரன் செய்தி எதிரொலியால் தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட் கிளை, இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை வசதி இல்லாதது ஏன் என்பது குறித்து அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள மருதூர் ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியினர் இறந்தால் மயானத்திற்கு கொண்டு செல்ல உரிய பாதை வசதி இல்லை. வயல்வெளிக்குள் இறங்கி நெற்பயிர்களுக்கிடையே சடலத்தை ஊர்வலமாக கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதேபோல் மேலூர் சென்னகரம்பட்டி நடுப்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியிலும் மயானத்திற்கான பாதை இல்லை. இதனால் இறந்த கூலித்தொழிலாளி ராமன் (70) என்பவரது உடலை வயலுக்குள் இறங்கி இறுதி ஊர்வலமாக கொண்டு சென்றது குறித்து நேற்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.

தினகரன் நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு நேற்று தாமாக முன்வந்து பொது நல மனுவாக விசாரணைக்கு எடுத்து கொண்டனர். அப்போது நீதிபதிகள், அடிப்படை உரிமை அனைவருக்கும் சமமான நிலையில், இன்னும் குறிப்பிட்ட ஒரு தரப்பினரை பாகுபாட்டுடன் பார்க்க கூடாது. அதுவும் இறந்த பிறகு ஒருவரை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை வசதி இல்லை என்பது வெட்கப்பட வேண்டிய தலைகுனிவான செயல். இவ்வளவு காலம் ஆகியும் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதி கிடைக்கவில்லை என்பது ஏற்புடையதல்ல எனக்கூறிய நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து விசாரிக்கிறோம்.

மேலூர் பகுதியில் ஏன் இந்த அவலநிலை உள்ளது என்பது குறித்து டிச.23 (நாளை) பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல், தமிழகம் முழுவதும் எத்தனை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகள் உள்ளன? அங்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன? சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? அங்கு இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை வசதி உள்ளதா என்பது குறித்து தமிழக அரசின் வருவாய் துறை செயலர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜன.20க்கு தள்ளி வைத்தனர்.

Tags : cemetery ,tribunal branch , Cemetery
× RELATED வேஷ்டியை கழற்றி ரகளை அமமுக ஒன்றிய செயலர் கைது