×

காரைக்குடி-மதுரைக்கு ரயில் சேவை: தொழில் வணிக கழகம் கோரிக்கை

காரைக்குடி: காரைக்குடியில் இருந்து மானாமதுரை வழியாக மதுரைக்கு புதிய ரயில் வேண்டும் என தொழில் வணிக கழகம், பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்குடியில் இருந்து அனைத்து தேவைகளுக்கும் பொதுமக்கள், வர்த்தகர்கள் மதுரைக்கு அதிகளவில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொடர் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் பெரிய அளவிலான நோய் தாக்கம் உள்ளவர்கள் மதுரையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுகின்றனர்.

தவிர மதுரையில் எய்ம்ஸ் அமையும் பட்சத்தில் உயர்தர சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மொத்த மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் நடத்துவர்கள், காய்கறி வியாபாரிகள், பூ விற்பனை செய்பவர்கள் என அனைவரும் மதுரைக்கு தான் பெரும்பாலும் செல்கின்றனர்.

காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக புதிய ரயில் பாதை அமைக்க ஆய்வுகள் முடிந்த நிலையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்குடியில் இருந்து மானாமதுரை வழியாக மதுரைக்கு புதிய ரயில் இயக்கும் பட்சத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனாக இருக்கும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தொழில் வணிகக் கழக தலைவர் சாமிதிராவிடமணி கூறுகையில், காரைக்குடியில் இருந்து மதுரை பேருந்தில் செல்ல 2 முதல் இரண்டரை மணி நேரம் ஆகிறது.

மாட்டுத்தாவணி பஸ் ஸ்ண்டாண்டு வரை செல்வதால் மீண்டும் நகருக்குள் செல்ல கூடுதலாக ஒரு மணி நேரம் ஆகிறது. தவிர பஸ் கட்டணம் ரூ.75, டவுன் பஸ் கட்டணம் ரூ.15 என ரூ.90 வரை செலவாகிறது. ராமேசுவரம் முதல் மதுரைக்கு 161 கிமீ தூரத்திற்கு ரயில் கட்டணம் ரூ.35 வாங்கப்படுகிறது.

அதேபோல் காரைக்குடியில் இருந்து மானாமதுரை வழியாக மதுரைக்கு ரயில் இயக்கப்படும் நிலையில் குறைந்த கட்டணமே வாங்கப்படும். தவிர ரயிலில் செல்வோர் மதுரை மாநகருக்குள் செல்ல வாய்ப்புள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு தினசரி இரண்டு முறை ரயில் விடுவதை போல் காரைக்குடியிலிருந்தும் மதுரைக்கு இரண்டு முறை விடுவதால் பலர் பலன் பெறுவார்கள். தவிர பஸ் பயண நேரமும் ரயில் பயணநேரமும் ஒன்றாகவே இருக்கும். எனவே காரைக்குடியில் இருந்து சிவகங்கை, மானாமதுரை வழியாக புதிய ரயில் இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என்றார்.

Tags : Karaikudi ,Madurai , Karaikudi, Madurai, Rail
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க