கோட்டையில் இருந்து செஞ்சிக்கு சுரங்கப்பாதை: வந்தவாசியில் வரலாற்றோடு அழிந்துபோகும் அகழி கோட்டை

பிரஞ்ச் ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு அடித்தளம் அமைத்தது 260 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வந்தவாசி போர் என்பது அனைவரும் அறிந்ததே. வந்தவாசியில் ஆற்காடு நவாப் ஆட்சி காலத்தில் அகழியுடன் கட்டப்பட்டது வந்தவாசி கோட்டை. அப்போது ஆற்காட்டில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த நவாப், கோட்டையை கட்டும்போது தொழுகை நடத்துவதற்காக, வந்தவாசி நகரை சுற்றியுள்ள பகுதியில் 5 மசூதிகளை ஆற்காடு நவாப் கட்டினார்.

அதில் தற்பொழுது காதர்ஜெண்டா தெருவில் உள்ள மசூதி மட்டும் நாவாப் பெயர் தாங்கி செயல்பட்டு வருகின்றது. 1760 ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி இன்றைய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி போர் தான், ஒட்டுமொத்த இந்தியாவும் பிரிட்டிஷ் பிடியின் கீழ் வீழ்வதற்கு வித்திட்ட இறுதிப் போர்.

பிரிட்டிசாருக்கும் பிரெஞ்சு படைக்கும் தென்னிந்தியாவைக் கைப்பற்றுவதில் பெரும் போர் நடந்து கொண்டிருந்த 18ம் நூற்றாண்டின் இறுதிக்காலம் அது. பிரிட்டிஷ் வசம் இருந்த ெசன்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றுவதற்கு புதுச்சேரி பகுதியில் இருந்து பிரெஞ்சு அரசு பெரும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தது. 1760ம் ஆண்டு இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் உள்ள வந்தவாசிக் கோட்டையைக் கைப்பற்ற போர் தொடுத்தது பிரெஞ்சுப் படை. பிரிட்டிஷ் தளபதி சர்.அயர் கூட், லாலி தலைமையிலான பிரெஞ்சுப் படையுடன் மோதியது. அந்தச் சமயம் ஆசியாவைக் கைப்பற்ற பிரிட்டிஷூம் பிரெஞ்சும் 3ம் கர்நாடகப் போரில் மோதிக்கொண்டிருந்தன. 1756-ம் ஆண்டு தொடங்கிய 3ம் கர்நாடகப் போர் நடந்து கொண்டிருக்கையிலேயே வந்தவாசிக் கோட்டையை பிரெஞ்சுப் படை கோட்டைவிட்டது.

வந்தவாசியில் பிரிட்டிஷிடம் படுதோல்வி அடைந்தது பிரெஞ்சுப் படை. 3ம் கர்நாடகப் போரை பிரிட்டிஷ் படைகள் வெல்வதற்கும், தென்னிந்தியாவை முழுமையாக கைப்பற்றுவதற்கும் இந்த வந்தவாசிப் போர் பெரிதும் உதவியது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் பலமாகக் காலூன்றி ஆட்சி, அரியணையில் அமர வந்தவாசிப் போர், ஆங்கிலேயருக்கு உதவியது என்பது வரலாறு. ஆங்கிலேயர்கள் வரலாற்றில் வந்தவாசி போர் சிறப்பிடம் வகிப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் புதுவையில் இருந்து திருப்பதி, காஞ்சிபுரம் செல்லும் வழியில் வந்தவாசியில் உள்ள சிதைந்து போன கோட்டை பகுதியை பார்வையிட்டு செல்வார்கள்.

வந்தவாசி கோட்டை பகுதியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற செஞ்சி கோட்டைக்கு சுரங்கப்பாதை செல்வதாகவும், அந்த சுரங்கப்பாதை வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கான புதிய கட்டிடம் கட்டுவதற்காக அடிதளம் அமைக்கும்போது அதற்கான சுரங்க பாதை கண்டதாகவும் கூறுவது வழக்கம். இந்த கோட்டைக்கான அகழி ஆரணி சாலையில் உள்ள சினிமா தியேட்டர் தொடங்கி, 2 கி.மீட்டர் தூரம் உள்ளது. அகழியில் வெளியாட்கள் உள்ளே நுழையாதபடி அகழி முழுவதும் முதலைகளை வளர்த்து பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.

தற்போது உள்ள கோட்டை பகுதியில் சுரங்க பாதைக்கான வழி தெற்கு திசை நோக்கி உள்ளதை தற்போதும் காணலாம். சுமார் 50 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட கோட்டை தற்போது அகழியுடன் சிதிலமடைந்து கோட்டையின் ஒரு பகுதி மட்டுமே உள்ளது. ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவில் காலுன்ற அடித்தளமாக அமைந்தது வந்தவாசி போர்தான் என்பது வரலாறு. அந்த வரலாறும் சிறிது சிறிதாக அழிந்து கொண்டிருக்கிறது.

Related Stories:

>