×

வங்கி கடனை செலுத்த நெருக்கடி: கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை: வங்கிக்கடன் செலுத்த நெருக்கடி கொடுத்ததால் மனமுடைந்த விவசாயி குடும்பத்துடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை பெட்டியில் மனுக்களை செலுத்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை, மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கோரிக்கை பெட்டியில் மனுக்களை செலுத்தலாம் எனவும், அதன்மூலம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஆனாலும், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேரில் மனு அளிக்க நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று வந்திருந்தனர். அவர்கள் அலுவலக நுழைவு வாயிலில் வைத்திருந்த பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகம் முன்பு செங்கம் தாலுகா, மேல்முடியனூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சரவணன்(50), என்பவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு மனைவி, 2 மகள்கள் மற்றும் மகனுடன் தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மேலும், சரவணனிடம் நடத்திய விசாரணையில் கூறியதாவது:எனக்கு சொந்தமான 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான விளை நிலத்தில், தோட்டக்கலைத்துறை மூலம் மலர்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்ய ரூ.47 லட்சம் மதிப்பில் பசுமைக் குடில் அமைத்தேன். இதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.20 லட்சம் கடன் வாங்கினேன். அரசு தரப்பில் ரூ.8.90 லட்சம் மானியம் கிடைத்தது. மேற்கொண்டு என்னுடைய வீட்டை விற்று செலவு செய்தேன்.
இந்நிலையில், கடந்த 29.5.2019 அன்று வீசிய புயலால், பசுமை குடில் முழுவதுமாக சரிந்து சேதமாகிவிட்டது. இதனால், பெரிய இழப்பு ஏற்பட்டது.

எனவே, வங்கிக்கடன் தொகையை திரும்பி செலுத்த இயலவில்லை. ஆனாலும், அரசு வழங்கிய மானியத்தை வங்கிக்கு செலுத்திவிட்டேன். மேலும், ரூ.1.37 லட்சத்தை வங்கிக்கு செலுத்தியிருக்கிறேன்.என்னுடைய நிலத்தை பார்வையிட்ட வேளாண் அதிகாரிகள், முழுமையாக சேதமடைந்ததை உறுதி செய்து, அறிக்கையும் அளித்துள்ளனர். ஆனாலும், கடன் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என வங்கி நிர்வாகம் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கிறது. எனவே, வேறு வழியின்றி தீக்குளிக்க முயன்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து தீக்குளிக்க முயற்சிப்பது சட்டப்படி தவறு என போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர். கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : collector , Bank loan
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...