மணப்பாறை அருகே பொய்கைமலை வனப்பகுதி கிராமங்களில் வெடி சத்தம்: பொதுமக்கள் பீதி

மணப்பாறை: மணப்பாறை அருகே பொய்கைமலை வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் மர்ம வெடிச்சத்தத்தால் பொதுமக்கள் பீதியடைந்து வருகின்றனர். மணப்பாறையை அடுத்த பொய்கைமலை வனப் பகுதியில் நேற்று மாலை 3 மணி அளவில் 10 கி.மீ. சுற்றளவுக்கு திடீர் வெடி சத்தம் கேட்டதால் மக்கள் பீதியடைந்தனர். பலத்த அதிர்வுடன் கூடிய இந்த வெடி சத்தத்தால் பலர் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதேபோல் வடுகப்பட்டி, பொய்கை திருநகர், பொய்கைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, சாம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த வெடிச்சத்தத்தையும் அதிர்வையும் மக்கள் உணர்ந்ததாக தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள் மிகவும் பீதியடைந்தனர்.

தகவலறிந்த மணப்பாறை டிஎஸ்பி., பிருந்தா மற்றும் வருவாய்த்துறையினர், வனத்துறையினர் என தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். கல்குவாரிகளில் வெடிகள் ஏதும் வைத்து வெடிக்கப்பட்டதா என விசாரணை நடத்தினர். பொய்கை திருநகர் பகுதியில் இந்த வெடிச்சத்தம் காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ள வீடுகளில் வருவாய்த்துறையினர் பார்வையிட்டு விசாரணை செய்தனர். நில அதிர்வா? அல்லது மர்ம பொருள் ஏதேனும் வெடித்ததா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், பொய்கைமலை வனப் பகுதியில் ஏற்பட்ட கரும்புகை சூறாவளியாக மாறி பல கிராமங்களை பெரும் சத்தத்துடன் அதிர்வடைய வைத்தது. அதுபோல நேற்று மாலை கேட்ட மர்ம சத்தம் எதனால் ஏற்பட்டது என தெரியாமல் மக்கள் பீதியில் உள்ளனர்.

Related Stories:

>