காதலி பேசாததால் ஆத்திரம்!: சாலையில் படுத்து உறங்கிய முதியவரை குடிபோதையில் தீ வைத்து எரித்து கொன்ற இளைஞர் நண்பர்களுடன் கைது..!!

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே காதலி பேசாததால் சோகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு சாலையில் படுத்து உறங்கிய முதியவரை எரித்து கொன்ற இளைஞன் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் அருகே இருளப்பபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர் 62 வயதான கூலி தொழிலாளி சந்திரன். இவர் சனிக்கிழமை இரவு இருளப்பபுரம் சந்திப்பில் உள்ள சாலையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 5 இளைஞர்கள் முதியவரிடம் லைட்டர் வாங்கி பின்னர் அவர் மீதே தீ வைத்து எரித்துக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மதுரையை சேர்ந்த பாலாஜி, லங்கேஸ்வரன், பொன்ராஜ், லட்சுமணன் உட்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாலாஜி ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். திடீரென அந்த பெண் பாலாஜியிடம் பேசாததால் ஆத்திரத்தில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு போதையில் சென்றபோது சாலையில் படுத்திருந்த முதியவரை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த இளைஞர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காதலி பேச மறுத்ததால் சாலையில் உறங்கி கொண்டிருந்த முதியவரை எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>