×

ஊழியர்கள் போராட்டம், கட்சிகள் எதிர்ப்பு எதிரொலி தனியார் மயமாக்கும் மின்வாரிய உத்தரவு வாபஸ்: மின்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: மின்வாரிய தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் கடும் எதிர்ப்பு காரணமாக ஒப்பந்த அடிப்படையில் மின் துறையில் ஊழியர்களை நியமிக்கும் உத்தரவை திரும்பப்பெற்றுக்கொள்வதாக மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். தமிழக மின்வாரியம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் பகிர்மான வட்டத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்தது. அதில், ‘மின் பகிர்மான வட்டத்தின் பிரிவு அலுவலகத்தின் மூலம் மின் நுகர்வோருக்கு தடையற்ற மின் விநியோகம் வழங்குதல், தினசரி பராமரிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை ஒப்பந்த ஊழியர்கள் மூலமாக மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தப் புள்ளிகளைத் தேர்வு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தப்புள்ளியை சம்பந்தப்பட்ட கண்காணிப்புப் பொறியாளர் உறுதி செய்வார். இதற்கான தொகை, பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட ஊழியர் நலன் சார்ந்த விஷயங்களோடு, ரூ.1 கோடி 80 லட்சத்து 88 ஆயிரம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு ஊழியருக்கு தினக்கூலி ரூ.412 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மின்வாரியத்தின் இந்த உத்தரவுக்கு, ஊழியர்களும், தொழிற்சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சம்மந்தப்பட்ட உத்தரவை உடனடியாக ரத்து செய்துவிட்டு, வழக்கம் போல் நிரந்தரமாக பணியாளர்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

மேலும் மாநிலம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவதாகவும் அவர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டமானது நேற்று நடந்தது. உடனடியாக சம்மந்தப்பட்ட உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்களின் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்வதற்காக, மின்துறை அமைச்சர் தங்கமணி மின்வாரிய தலைமையகத்திற்கு வந்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் திடீரென அவரை முற்றுகையிட்டு, சம்மந்தப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கோஷம் எழுப்பினர். போலீசார் அமைச்சரை பத்திரமாக மீட்டு அழைத்துச்சென்றனர். மேலும் மின் ஊழியர்களின் இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டு தீயாக பரவியது.

இந்த பரபரப்பான சூழலில் மின்துறை அமைச்சர் தங்கமணி அளித்த பேட்டி: எந்த சூழ்நிலையிலும் மின்வாரியம் தனியார் மயமாகாது என்பது குறித்து கடந்த 17ம் தேதி முழுமையாக விளக்கம் கொடுத்திருந்தேன். ஆனால் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்றும் (நேற்று) போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தேன். ஆனால் வர மறுத்து விட்டனர். அவர்களின் எண்ணம் என்ன என்பது குறித்து புரியவில்லை. அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்துகிறார்களா என்று சந்தேகமாகவுள்ளது. மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதற்கு ஒரு முன்னோட்டமாக நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று தவறாக புரிந்து கொண்டுவிட்டார்கள்.

ஆகவே அந்த ஆணையை நாங்கள் திரும்பப்பெற்றுக்கொள்கிறோம். பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றாலும் கூட ஆணையை திரும்பப்பெற்றுக்கொள்கிறோம். கேங்மேன் தேர்வு முடிந்த பிறகு உயர் நீதிமன்றத்திற்கு சென்று தடையாணை வாங்கியுள்ளார்கள். தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் நாளைய தினமே வழக்கை வாபஸ் வாங்குகிறார்கள் என்று சொன்னால் 10 ஆயிரம் பேருக்கு இந்த வாரத்திலேயே பணி கொடுக்கப்படும். பணி கொடுக்காததற்கு அரசு காரணம் அல்ல. தொழிற்சங்கங்கள் தான் காரணம். உதவி பொறியாளர் பணியிடத்திற்கு 600 பேரை தேர்வு செய்யவுள்ளோம். ஐடிஐ படித்தவர்களை பீல்ட் அசிஸ்டண்ட் ஆகா 2,900 பேரையும் தேர்வு செய்யவுள்ளோம். அதற்கான பணி தொடங்கியுள்ளது. மின்வாரியம் மட்டும் அல்ல எந்த பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் மயமாகாது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Thangamani ,parties , Employees protest, anti-party protests echo privatization order: Power Minister Thangamani interview
× RELATED அதிமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை