×

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை எதிர்த்து வழக்கு தமிழக அரசு பதில் தர இறுதி அவகாசம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், இறுதி விசாரணைக்காக வழக்கை ஜனவரி 18ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்த தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், கேம்ஸ்கிராப்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனமும் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கேம்ஸ்கிராப்ட் தரப்பில் ஆஜரான வக்கீல் வெளியில் சென்று ரம்மி விளையாடுவதைவிட ஆன்லைனில் விளையாடுவது பாதுகாப்பானது. ரம்மி என்பது விளையாட்டு மட்டுமல்ல, திறமையை வளர்க்கக்கூடியது.கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது தொடர்பாக குதிரை பந்தய வழக்குகளில் முன்னுதாரணங்கள் உள்ளதால் வழக்கு முடியும்வரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஏற்கனவே தொடர்ந்த வழக்குகளில் பதிலளிக்கவும், இறுதி வாதங்களை வைப்பதற்கும் மேலும் அவகாசம் வேண்டும்.குதிரை பந்தயமும், ரம்மியும் ஒன்றாக கருத முடியாது.

பெற்றோரின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பிள்ளைகள் ஆன்லைன் ரம்மி விளையாடுகிறார்கள். அவசர சட்டத்துக்கு பதிலாக ஜனவரி முதல் வாரத்தில் சட்டம் இயற்றப்படும் என்பதால் அதன்பின்னர் பதிலளித்து, இறுதி வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், குதிரை பந்தயத்தில் கலந்து கொள்வதும், உட்கார்ந்த இடத்திலேயே ரம்மி விளையாடுவதையும் ஒன்றாக கருதமுடியாது . அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கில், இறுதி விசாரணையை ஜனவரி 18ம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Government ,Tamil Nadu ,Chennai iCourt , Government of Tamil Nadu responds to online rummy ban case: Chennai iCourt order
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...