×

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம்: வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு குவாரன்டைன் கட்டாயம்: அமைச்சர் சுதாகர் அறிவிப்பு

பெங்களூரு: வெளிநாட்டில் இருந்து வருகிற அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் சுதாகர் அறிவித்தார். மாநில சுகாதார துறை அமைச்சர் கே.சுதாகர் விதானசவுதாவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையொட்டி மாநிலத்தில் கொரோனா தடுப்பு விதிகள், மத்திய சுகாதார அதிகாரிகள் வழிக்காட்டு முறைகள் 100 சதவீதம் கடைபிடிக்கப்பட வேண்டும் என  அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அத்துடன் தனி மனித இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துவது, முக கவசம் அணிவதை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். ஓட்டல்கள், பார், பப் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பு விதிகள் கடைபிடிக்க வேண்டும். விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளோம். குறிப்பாக பெங்களூரு மாநகரில் கொரோனா தடுப்பு விதிகள் மீறும் நபர்களை கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மார்ஷல்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை எச்சரிக்கையுடன் பி 117 என்ற வைரசின் பரவல் இங்கிலாந்தில் அதிக பேர்களை தாக்கி வருகிறது. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் 60 சதவீதம் பேர் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசின் புதிய உருவம் என கருதப்படும் பி 117 வைரஸ் கொரோனா வைரஸ் 19 விட 70 சதவீதம் அபாயமானது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வருகிற பயணிகள் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்யப்படுகிறது. டிசம்பரில் கர்நாடக மாநிலத்திற்கு வந்த பயணிகளில் 138 பேர் கொரோனா பரிசோதனை  அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

அந்த நபர்கள் யார்? யார்? என்பதை அடையாளம் காண்பதற்கான பணியில்  அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி விமானம் மற்றும் கப்பல் மூலமாக மாநிலத்திற்குள் நுழையும் அனைவருக்கும் சுய தனிமைப்படுத்துதல் (குவாரன்டைன்) கட்டாயம்  ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அந்த பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர். வைரஸ் தொற்றின் பாதிப்பு இல்லை என்றாலும் 7 நாட்கள் சுய வீட்டு தனிமையில் இருக்கவேண்டும். அத்துடன் அந்த நபர் உடன் தொடர்பில் இருக்கும் நபர்கள் பற்றிய விபரமும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் மற்றும் புதிதாக பரவி வருகிற பி 117 வைரசினால் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, பொதுமக்கள் எவ்வித பயமும் கொள்ள தேவையில்லை என்று கேட்டுக்கொள்கிறோம். அதே நேரம் தடுப்பு நடவடிக்கையை அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என்றார்.

விவரங்கள் சேகரிப்பு
இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 7ம் தேதி முதல் நேற்று வரை விமான மற்றும் கப்பல் மூலமாக மாநிலத்திற்கு வந்த பயணிகள் பற்றிய விபரங்களை சேகரித்து 14 நாள் வீட்டில் தனிமையில் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அத்துடன் விமானம் மற்றும் கப்பல் பயணிகள் அனைவருக்கும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை நடத்தி தொற்று உறுதியானால் அவர்களை மருத்துவமனைக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்றால் 14 நாள் வீட்டு தனிமையில் இருக்கும்படி செய்யவேண்டும். அத்துடன் பயணிகளுடன் யார் யார் தொடர்பில்  இருந்தனர்? என்பதை மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு இந்த விபரம் அளிக்கப்படவேண்டும் என்று மாநில  குடும்ப நலத்துறை கூடுதல் செயலாளர் ஜாவித் அக்தார் பெங்களூரு விமான நிலையம், மங்களூரு மற்றும் கார்வார் துறைமுக நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,wave ,foreigners ,announcement ,Sudhakar , Corona
× RELATED மோடி அலை இல்லை: பாஜக வேட்பாளர் பேச்சால் பரபரப்பு