×

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் தொடர்பாக “மைசிட்டி-மைபட்ஜெட்” விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாநகர கமிஷனர் மஞ்சுநாத்பிரசாத் தொடங்கி வைத்தார்

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் திட்டத்தில் என்னென்ன புதிய அம்சங்கள் இடம் பெறவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் “மை சிட்டி- மை பட்ஜெட் “விழிப்புணர்வு நிகழ்வு நேற்று நடந்தது. பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில்  இதற்கான வாகனத்தை கமிஷனர்  மஞ்சுநாத்பிரசாத்  தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறியதாவது, பெங்களூரு  மாநகர பட்ஜெட்டில்  என்னென்ன புதிய திட்டங்கள் இடம் பெற வேண்டும்? நடைபாதை, பூங்கா சீரமைப்பு உள்ளிட்டவை குறித்த விபரங்கள் பற்றிய மக்களின் கருத்துகளை அறிவதற்காக  ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுகிறது. பெங்களூரு வாசிகள் தங்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை இந்த வாகனங்களில் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தியுள்ளோம். இந்த வசதியை பெங்களூருவாசிகள் பயன்படுத்தி  பட்ஜெட் தயாரிப்பின் போது  உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அது போல் தடுப்பு மருந்து வினியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் 25 லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள் சேமித்து வைக்க தேவையான வசதி இருக்கிறது. கொரோனா தடுப்பு மருந்திற்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்த உடனே அதை சேமித்து வைக்கவும் கொரோனா தடுப்பு மருந்தை வினியோகம் செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் எடுத்துள்ளோம்.

பெங்களூருவில் தினந்தோறும் 45 ஆயிரம் பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மகாதேவபுரா, பொம்மனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தி வருகிறோம். கொரோனா வைரஸ்  பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் சிகிச்சை பெறுவதிலும் அலட்சியமாக சிலர் உள்ளனர். அதுபோன்ற காரணத்தினால் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. எனவே, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக மாநகராட்சி அல்லது  அரசு சுகாதார மையத்தை அணுகவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் 90 சதவீதம் காலியாக இருப்பதால் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தாமதம் இன்றி உரிய  சிகிச்சை அளிக்கப்படும். கொரோனா பாதிப்பின் காரணமாக இந்த வருடம் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய சுகாதார துறை  மற்றும் மாநில அரசின் விதிகள் அனைத்தும் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். தனியார் ஹோட்டல்கள், பப் உள்ளிட்டவைகளில் கொண்டாட்டங்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை.

அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்  எளிமையாக நடைபெற வேண்டும். அதே நேரம் சாளரங்களில் கூட்டமாக நின்று யாரும் நிகழ்வுகளை கொண்டாடக்கூடாது. கொரோனா பாதிப்பு இன்னும் நீங்காத நிலையில் வைரஸ்  தொற்று பரவலை தடுப்பதற்கான விதிகளை மீறும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் 440 மார்ஷல்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக’’ தெரிவித்துள்ளனர்.

Tags : Manjunath Prasad , Bangalore, Awareness, Municipal Commissioner
× RELATED மஞ்சுநாத் பிரசாத் மாற்றப்பட்டார்...