×

டிராபிக் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கும் மக்கள்: ஜீப்ரா எல்லைகோட்டை கடப்பதற்கு தயங்கும் வாகன ஓட்டிகள்

பெங்களூருவில் போக்குவரத்து போலீசாரின் கெடுபிடியால், ஜீப்ரா எல்லை கோடுகளை தாண்டி செல்வதற்கு பயப்படும் வாகன ஓட்டிகள், விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். இந்தியாவில் உள்ள மெட்ரோ சிட்டிகளில் போக்குவரத்து கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் நகரங்களில் ஒன்று பெங்களூரு. சிக்னல் ஜம்பிங், அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டுபவர்களை கண்காணிப்பது, ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் அபராதம், கார் ஓட்டுனர்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம், பைக்கில் 3 பேர் பயணிக்ககூடாது. பின்புறம் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டுமென்று பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த விதிமுறைகளை மீறுபவர்களை சம்பந்தப்பட்ட இடத்தின் அருகே இருந்து மடக்கி பிடித்து அபராதம் வசூலித்து வந்தனர். நாளடைவில் சிக்னல் கேமராக்களை வைத்து, போக்குவரத்து விதிமுறை மீறல்களை கண்காணிக்க தொடங்கினர். இதனால் காவலர்கள் அதிகளவு சாலைகளில் நிற்கவேண்டிய அவசியம் இல்லை. விதிமுறைகளை மீறுபவர்கள் வீட்டு முகவரிக்கே அபராத தொகைக்கான ரசீது அனுப்பி வைக்கப்படும். அருகாமையில் இருக்கும் போக்குவரத்து காவல் நிலையத்தில் அபராத தொகையை செலுத்தவேண்டும். இல்லையென்றால் போக்குவரத்து லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த திட்டம் ஓரளவிற்கே வெற்றி அடைந்தது. ஏனென்றால் விதிமுறையை மீறியதாக பிடிப்படும், வாகன ஓட்டிகள், வீடுகளை மாற்றம் செய்வதால், முகவரி குளறுபடி ஏற்பட்டு, பெங்களூரு நகரில் இது தோல்வியடைய தொடங்கியது. இதையடுத்து போலீசார் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை அமல்படுத்தினர். சிக்னல்களில் இருக்கும் கேமராக்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களின் வாகன எண்களை நோட்டமிட்டு, போக்குவரத்து போலீசாரின் தானியங்கி கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்துவிடும். அவர்கள் வாகன எண்களை குறிப்பிட்டு, போக்குவரத்து போலீசாரின் கையில் இருக்கும் இன்டர்ப்ஷன் மிஷினுக்கு பதிவேற்றம் செய்துவிடும்.

அவர்கள் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை இடைமறித்து, இன்டர்ப்ஷன் மிஷினில் நம்பரை தட்டச்சு செய்தால் போதும், எவ்வளவு முறை போக்குவரத்து விதிமுறை மீறியிருக்கிறார்கள் என்பதை காண்பித்துவிடும். மேலும் எவ்வளவு அபராத தொகை செலுத்த வேண்டுமென்பதையும் காண்பித்துவிடும்.  இதையடுத்து போக்குவரத்து போலீசார் பிடிபடும் இடத்திலேயே அபராத தொகைகளை வசூல் செய்துவிட்டு, அதற்கான ரசீதுகளை கொடுத்தனுப்பி வந்தனர். சிலர் தன்னிடம் பணம் இல்லை, ஏ.டி.எம் கார்டுதான் இருக்கிறது என்று கூறி தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை அடையாளம் கண்ட போலீசார், டிஜிட்டல் கார்டு ஸ்வைப்பிங் இயந்திரத்தை கொண்டு, அபராதத்தை வசூலித்தனர். இந்த இயந்திரத்தின் மீது ஏ.டி.எம் கார்டுகளை வைத்தாலே போதும், எவ்வளவு தொகை எடுக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறோமோ, அதை வசூலித்துவிடும்.  இவ்வாறு பல்வேறு நவீனத்துவத்தை போலீசார் கடைப்பிடித்து, விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீப நாட்களாக ஜீப்ரா கிராசிங் கோர்டு அபராதம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  அதாவது பாதசாரிகள் சாலையை கடந்து செல்வதற்கு ஒவ்வொரு முக்கிய சிக்னல்களிலும் வெள்ளை நிறத்தில் வரிசையாக கோடுகள் வரையப்பட்டிருக்கும். சிவப்பு நிற சிக்னல் விழுந்ததும், வாகன ஓட்டிகள் இந்த ஜீப்ரா கோடுகளுக்கு முன்னதாக பைக், கார் போன்ற எந்த வாகனமாக இருந்தாலும், நின்றுவிடவேண்டும். ஜீப்ரா கோட்டை பாதசாரிகள் கடந்து செல்லும்வரை வாகன ஓட்டிகள் காத்திருக்கவேண்டும். அதே நேரம் பாதசாரிகளை தடுத்து நிறுத்த சிகப்பு நிற சிக்னல்கள் ஒலித்தால், ஜீப்ரா கோட்டை அவர்கள் கடக்க கூடாது. வாகன ஓட்டிகள் அந்த ஜீப்ரா கோட்டை கடந்து செல்லலாம்.
இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு வாகன ஓட்டிகளை சோம்பேறியாகவும், மெத்தமானமாகவும் மாற செய்துவிட்டது. அதாவது பொது ஊரடங்கு தளர்வின் போது, பெரும்பாலான வாகன ஓட்டிகள் விதிமுறைகளை கடைபிடிக்க வில்லை. நினைத்தபடி வாகனத்தை ஓட்டி வந்தனர். தற்போது கொரோனா பொது ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்டதால், விதிமுறைகளை மீறியவர்கள் அனைவரும் மீண்டும் மாட்டி கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு போலீசாருக்கு உதவியாக இருந்தது சிக்னல்களில் இருந்த கேமராக்கள்தான்.

சுதந்திரமாக சுற்றி திரிந்தவர்கள் டிராபிக் சிக்னல்களில் இருந்த கேமராக்களில் சிக்கி கொண்டனர். அவர்களை அடையாளம் கண்ட போலீசார், தானியங்கி கட்டுப்பாட்டு கேமராக்கள் மூலம் வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு அபராதம் வசூலிக்க தொடங்கினர். குறிப்பாக ஜீப்ரா கோடுகளை கிராஸ் செய்தவர்களிடம் அதிகப்படியாக அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆரம்பத்தில் எதற்காக இவ்வளவு அபராத தொகை என்று யாருக்கும் தெரியவில்லை. பின்னர் போலீசாரிடம் கேட்டபோதுதான், அவர்கள் ஜீப்ரா கோடுகளை தாண்டினாலே அபராதம் வசூலிக்கப்படும்.
இதற்காகத்தான் ஒவ்வொரு ஜீப்ரா கோடுகளுக்கு முன்பு வாகனங்களை, எச்சரிக்கும் வண்ணம், நீண்ட ஒற்றை வரி கோடுகள் வரையப்பட்டிருக்கும். அந்த கோடுகளுக்குள் வாகனங்களை நிறுத்திவிட வேண்டும்.

கோடுகளை தாண்டி வந்தால், அபராதம் வசூலிக்கப்படும். இதை போலீசார் கண்காணிக்க வேண்டிய தேவையில்லை. சிக்னல்களில் இருக்கும் கேமராக்களை கண்காணித்து அனுப்பிவிடும்.  இதை தெரிந்து கொண்டு, உஷரான ஒவ்வொரு பயணிகளும், எதற்கு இந்த வீண் விளையாட்டு என்று நினைத்து தற்போது, வெள்ளை கோடுகளுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்திக்கொள்கின்றனர். பச்சை நிற சிக்னல்கள் விழுந்தால் மட்டுமே, வெள்ளை நிற கோடுகளை கிராஸ் செய்கின்றனர். கொரோனா பொது ஊரடங்கில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களை தானியங்கி கண்காணிப்பு இயந்திரத்தின் மூலம் கண்டுபிடித்து, அபராத தொகையை வசூலித்துவிடுகின்றனர். இதனால் வாரத்திற்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை போக்குவரத்து போலீசாருக்கு அபராதம் வசூலாவதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்டர்ப்ஷன் மிஷின் என்றால் என்ன
பெங்களூரு போக்குவரத்து போலீசார் முதலில் ஆன்ட்ராய்டு டேப்புகளை வைத்து, வாகனங்களில் விதிமுறை மீறல்களை கண்காணித்து வந்தனர். அதாவது தானியங்கி கேமரா கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இந்த டேப்பிற்கு அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படும். அதை வைத்து வாகன ஓட்டிகள் எவ்வளவு போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு வந்தது. ஆனால் இது குறிப்பிட்ட இடத்தில் வைத்து மட்டுமே செயல்படுத்த முடியும். ஆனால் இன்டர்ப்ஷன் மிஷின், போக்குவரத்து போலீசார் எந்த இடத்தில் வைத்து வேண்டுமானாலும், பயன்படுத்தி கொள்ளலாம். பெங்களூரு முழுவதும் உள்ள சிக்னல்களில் உள்ள கேமராக்கள் பதிவிட்டு, அனுப்பும் விவரங்கள் அனைத்தும், இந்த மிஷினில் பதிவாகிவிடும். குறிப்பாக சிக்னல் ஜம்பிங், ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது, 3 பேர் பயணிப்பது, நம்பர் பிளேட் இல்லாமல் பயணிப்பது, ஒற்றை வழி சாலையில் பயணிப்பது உள்பட பல்வேறு விதிமுறை மீறல்களை கண்காணித்து, இன்டர்ப்ஷன் மிஷினுக்கு அனுப்பி வைத்துவிடும். இதை வைத்து பிடிபடும் வாகன ஓட்டியின் நம்பரை தட்டச்சு செய்து மறுநிமிடம் அவர் எவ்வளவு விதிமுறை மீறலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிந்துவிடும்.


Tags : Motorists ,zebra crossing , Traffic, regulation, motorists
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...