புதிய இணைப்பு வழங்க 10 ஆயிரம் லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது: உதவியாளரும் சிக்கினார்

வேளச்சேரி: புதிய மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவிப் பொறியாளர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இதற்கு மின் இனைப்பு கேட்டு, மேடவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்து இருந்தார். மின் இணைப்புக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்கள் ஆகியும்  இணைப்பு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக,  மின்வாரிய உதவி பொறியாளர் ரமேஷிடம் (45) கேட்டபோது, 10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணி, இதுகுறித்து சட்ட பஞ்சாயத்து  அமைப்பிடம்  தெரிவித்தார். அவர்கள், ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், சுப்பிரமணியனிடம் ரசாயனம்  தடவிய ₹10 ஆயிரத்தை கொடுத்து, உதவி பொறியாளர் ரமேஷிடம் கொடுக்கும்படி கூறினர்.

அதன்படி, சுப்பிரமணி நேற்று ரமேஷேிடம் பணத்தை கொடுத்தபோது, அதை அவர் வாங்காமல், தனது உதவியாளர் சீனிவாசனிடம் (46) கொடுக்கும்படி கூறியுள்ளார். அதன்படி, பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இருவரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மேலும், இருவரையும் அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 3 மணி வரை நீடித்தது. அப்போது, அவர்களிடம் இருந்து கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ேசாதனை காரணமாக மேடவாக்கம் மின்வாரிய அலுவலகம் மூடப்பட்டதால், மின் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories:

>