ஓட்டல், கிளப்கள், கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு; தடையை மீறினால் கடும் நடவடிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் 2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் 2 நாட்கள் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. தடையை மீறுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது. இதையொட்டி, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், கிளப்கள், பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. சென்னை மாநகரில் அண்ணாசாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல்களில் வெளிநாட்டு அழகிகளின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள், கடற்கரையையொட்டி உள்ள விடுதிகள் ஆகியவற்றிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் 31ம் தேதி அன்று இரவு ஒரு லட்சம் பேர் வரையில் கூடுவார்கள். இரவு 12 மணியானதும் ஹேப்பி நியூ இயர் கோ‌ஷம் விண்ணை பிளக்கும் அளவுக்கு மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிப்பார்கள். மேலும் பொது மக்களோடு சென்னை போலீஸ் கமி‌ஷனர் கேக் வெட்டி கொண்டாடுவார். பொதுமக்களுக்கு போலீசார் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். மேலும் 31ம் தேதி வியாழக்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஓட்டல்கள் தயாராகி வரும் நிலையில் தமிழக அரசு 2021ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நேற்று இரவு திடீரென தடை விதித்தது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், 2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் வரும் 31ம் தேதியன்று இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில், அதிகமான அளவில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. 2021ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வரும் 31ம் தேதியன்று இரவு முதல் அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் பொதுமக்கள் மிக அதிகமான அளவில் கூட வாய்ப்புள்ளது.

மேலும் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும். எனினும் வரும் 31ம் தேதியன்று இரவு நடத்தப்படும் 2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது. மேலும், அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால், 31ம் தேதி மற்றும் 1ம் தேதி ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கொரோனா நோய்த் தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை அரசு தடை செய்துள்ள இளைஞர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதேநேரத்தில்  தடையை மீறி புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டத்தில் ஈடுபட முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, கடற்கரை சாலைகள் வரும் 31ம் தேதி நள்ளிரவு மூடப்படும். முக்கிய சாலைகளில் கொண்டாட்டத்தை தடுக்க போலீசார் குவிக்கப்படுவார்கள். அதோடு, நட்சத்திர ஓட்டல்கள், கிளப்கள் போன்றவற்றையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>