நீண்ட இடைவெளிக்கு பின் களை கட்டியது கன்னியாகுமரி: இன்று காலை ஏராளமானோர் குவிந்தனர்

கன்னியாகுமரி: ஊரடங்கு தளர்வு காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இன்று காலை சூரிய உதயத்தை காண ஏராளமானோர் திரண்டனர். கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். விடுமுறை நாளான நேற்று சீசன் காலத்தை போல் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இவர்கள் முக்கடல் சங்கமத்தில் நீராடி மகிழ்ந்தனர். மேலும் கடற்கரையில் அமர்ந்து சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்தனர்.

இதுபோல் இன்று காலை சூரிய உதயத்தை காண ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் கடற்கரையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டு பகுதியில் அமர்ந்து சூரிய உதயத்தை பார்த்தனர். இன்று காலை வானம் மேகமூட்டமின்றி தெளிவாக இருந்ததால் சூரிய உதயம் தெளிவாக தெரிந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் முக்கடல் சங்கமத்தில் கால் நனைத்து, மணல் பரப்பில் விளையாடி மகிழ்ந்தனர். நீண்ட  இடைவெளிக்கு பின் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர தொடங்கி இருப்பதால் இங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>