×

களக்காடு அருகே இரவு பணியில் இருந்த போலீசாரை விரட்டிய கரடி: பொதுமக்கள் பீதி

களக்காடு: களக்காடு அருகே மீண்டும் கரடி நடமாட்டம் காணப்பட்டதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளத்தில் கடந்த சில மாதங்களாக கரடிகள் நடமாட்டம் காணப்படுகிறது. அங்குள்ள பொத்தையில் தஞ்சமடைந்துள்ள கரடிகள் உணவுக்காக விளைநிலங்களில் புகுந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டப்பகலில் ஊருக்குள் சுற்றிய கரடி வனத்துறை ஊழியர் உள்பட இருவரை தாக்கியது. அந்த கரடியை வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர். அதன்பின் கடந்த 1 மாதத்திற்கு முன்பு விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய கரடியை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவில் சிங்கிகுளம் அம்மன் கோயில் அருகே கரடி சுற்றி திரிந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீஸ்காரர்கள் கரடியை பார்த்ததும் அதனை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் கரடி அவர்களை விரட்டியது. இதையடுத்து போலீசார் அருகில் உள்ள ஒரு டீக்கடைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு உயிர் தப்பினர். இதுபற்றி களக்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் கரடி நடமாட்டம் காணப்பட்டதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : jungle ,panic , Bear chases police on night duty near jungle: Public panic
× RELATED செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறத்தில்...