×

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது: 29ம் தேதி தேரோட்டம் நடக்கிறது

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா. இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 29ம் தேதி தேரோட்டமும், 30ம் தேதி ஆரூத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது. உலகப் பிரசித்தி பெற்றது சிதம்பரம் நடராஜர் கோவில். கடலூர் மாவட்டத்தின் முக்கிய கோயில்களில் ஒன்றான இக்கோயில் பூலோக கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தேரோட்டம் மற்றும் தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று (21ம்தேதி) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நடராஜர் கோவிலில் நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சர்வேஸ்வர தீட்சிதர் கொடியேற்றி வைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தார். இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கிய இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 29ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு நடராஜருக்கு சிறப்பு அர்ச்சனை நடக்கிறது. மறுநாள் 30ம் தேதி காலையில் மகாபிஷேகம், அதைத்தொடர்ந்து திருவாபரண அலங்காரம், சித்சபை ரகசிய பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடை பெறும்.

பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெறும். இதில் நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனமாடியபடியே பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். மிக முக்கிய விழாவான இந்த விழா விழாவால் நடராஜர் கோவில் களைகட்டியுள்ளது இந்த ஆண்டு ஆனி மாத தேரோட்டம் மற்றும் தரிசன விழா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தீட்சிதர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு திருவிழா நடத்தப்பட்டது.

ஆனால் இந்த மார்கழி ஆரூத்ரா தரிசனம் நடைபெறும் நேரத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேரோட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் என்றும், இன்னும் சில தினங்களில் கடலூர் மாவட்ட நிர்வாகம் இதுபற்றிய அறிவிப்பை வெளியிடும் என்றும் தெரிகிறது. எனவே இந்த விழாவில் பங்கேற்பதற்காக உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

Tags : ceremony ,Arudra Darshan ,Chidambaram Natarajar Temple ,election , Arudra Darshan Festival at Chidambaram Natarajar Temple begins today with flag hoisting: Therottam on the 29th
× RELATED சிதம்பரம் கோயில்: பிரமோற்சவம் நடத்தக்கோரி வழக்கு