மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பராமரிப்பு இல்லாததால் கோபுரங்களில் வளரும் செடி, கொடிகள்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பராமரிப்பு இல்லாததால் கோபுரங்களில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. சிலைகள் சேதமடையும் முன் இவைகளை கோயில் நிர்வாகம் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 8 கோபுரங்கள், 2 விமானங்களை உடையது. கோயிலில் ஆடி வீதிகளில் 4 கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் உள்ளன. கோயிலில் 2018ம் ஆண்டு பிப்.2ம் தேதி தீவிபத்து ஏற்பட்டு வீரவசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது.

அதனை பழமை மாறாமல் மேம்படுத்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான பணி மிக விரைவில் தொடங்க உள்ளது. இதற்கிடையே வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு உள்ளிட்ட கோபுரத்தின் மேல்பகுதியில் அரசமரம், வேப்பமரம் உள்ளிட்ட செடி, கொடிகள் மண்ணில் முளைப்பது போல் முளைத்து நிற்கின்றன. பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்லும் நகரின் மையமான முக்கிய புண்ணியத்தலமான மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தில் செடி, கொடிகள் முளைத்திருப்பது கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திருப்பாலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கோபுரத்தில் முளைத்துள்ள செடிகளை அகற்றப்படாமல் இருப்பது, அதன் பராமரிப்பின் நிலையை காட்டுகிறது. 2020-2021ம் ஆண்டு நடக்க வேண்டிய கும்பாபிஷேகத்தையும் நடத்த நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோபுரங்கள் மற்றும் வடக்குவாசல் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள சுற்றுச்சுவர்களை சீரமைக்க வேண்டும். கோபுரங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்’ என்றார்.

Related Stories:

>