மேலூரில் தொடரும் அவலம் வயலுக்கு நடுவில் இறுதி ஊர்வலம்: பாதை அமைப்பார்களா அதிகாரிகள்?

மேலூர்:  மேலூர் பகுதியில் மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் வயல் வெளியில் நெல்நாற்றுகள் இடையே இறுதி ஊர்வலம் நடந்து வருகிறது. மேலூர் அருகே மருதூர் ஆதி திராவிடர் காலனி மக்களுக்கு மயானத்திற்கு செல்வதற்கு உரிய பாதை வசதி இல்லாததால் நேற்று முன்தினம் வயல்வெளியில் இறங்கி நெற்பயிர்களுக்கிடையே இறுதி ஊர்வலம் சென்றனர். இது குறித்த செய்தி ‘தினகரன்’ நாளிதழில் நேற்று வந்தது. இந்நிலையில் அதேபோல் மேலூர் அருகே உள்ள சென்னகரம்பட்டி நடுப்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த ராமன்(70) என்ற கூலி தொழிலாளி நேற்று இறந்தார். இந்த கிராமமக்களுக்கும் மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லை. எனவே அவரது உடலை வயலுக்குள் இறங்கி நெற்பயிர்களுக்கிடையே மயானத்திற்கு தூக்கி சென்றனர்.

இது குறித்து கிராமமக்கள் கூறுகையில், மாயானத்திற்கு உரிய பாதை அமைத்து தர வேண்டும் எனபல முறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. விவசாய பணிகள் நடைபெறும் போது இதுபோல் வயலுக்குள் இறங்க வேண்டி உள்ளது என கூறி 20 நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பெயரளவிற்கு அப்போது பாதை அமைப்பதாக உறுதி கூறிய அதிகாரிகள் அதன் பிறகு கண்டு கொள்ளவில்லை. உடனடியாக மயானத்திற்கு பாதை அமைக்க வேண்டும். நாடெங்கும் 4 வழிச்சாலை, 8 வழிச்சாலை போட்டு வரும் அரசு, இன்னும் கிராம பகுதியில் கடைசி புகலிடமான மயானத்திற்கு பாதை அமைக்காமல் இருப்பது வெட்க கேடானது’’ என்று தெரிவித்தனர்.

Related Stories:

>