×

நிவர், புரெவி புயல்களால் தொடர் மழை பெய்தும் கன்னிவாடியில் வறண்டு கிடக்கும் நாயோடை நீர்த்தேக்கம்

* தூர்வாராததால் புதர்மண்டிக் கிடக்கும் அவலம்
* திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டதால் புறக்கணிப்பு

சின்னாளபட்டி: நிவர், புரெவி புயல்களால் தொடர் மழை பெய்தும் கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்கம் சொட்டு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. முறையாக தூர்வாராததால் புதர்மண்டிக் கிடக்கிறது. திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நீர்த்தேக்கம் என்பதால் பொதுப்பணித்துறை புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கன்னிவாடி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சுமார் 74 ஏக்கரில் நாயோடை நீர்த்தேக்கம், கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இதில் தண்ணீரை தேக்கினால் 500 ஏக்கர் பாசன வசதி பெறும். ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், புதர்மண்டிக் கிடக்கிறது. நீர்த்தேக்கத்தில் தண்ணீர் திறந்துவிடும் ஷட்டர் திருடுபோனதால், மண் மூட்டைகளை வைத்து அடைத்துள்ளனர்.

2019-20 குடிமராமத்து திட்டம் மூலம் நீர்தேக்க கண்மாயில் மதகு, கலிங்கு பழுதுபார்த்தல், வாய்க்கால் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சிரங்காடு நீரினை பயன்படுத்துவோர் சங்கத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், ரூ.9 லட்சத்துக்கு செலவு செய்ததாக பொதுப்பணித்துறை கணக்கு காட்டியுள்ளனர். நிரவி, புரெவி புயல்களால் தொடர் மழை பெய்தும், நீர்த்தேக்கத்தில் சொட்டுத் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.இது குறித்து திமுக துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ கூறுகையில், ‘திமுக ஆட்சியில் விவசாயிகளின் நலன் கருதி கன்னிவாடி பகுதியில் நாயோடை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. திமுக ஆட்சியின்போது அமைக்கப்பட்ட நீர்த்தேக்கம் என்பதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. குடகனாறு பிரச்சனையிலும் பொதுப்பணித்துறையினர் மெத்தனம் காட்டுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் குளங்கள் மற்றும் கண்மாய்களை தூர்வாரியதாக கண்துடைப்பாக கணக்கு காட்டியுள்ளனர். முறையாக தூர்வாரியிருந்தால் நாயோடை நீர்த்தேக்கத்தில் தண்ணீர் தேங்கியிருக்கும்.

குடகனாற்றை ரூ.97 லட்சத்தில் 27 கி.மீ தூர்வாரியதால் காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் தண்ணீர் சேதாரமில்லாமல் ஆத்தூர் தொகுதி மட்டுமல்லாமல், வேடசந்தூர் தொகுதி வரை செல்கிறது. விவசாயிகளுக்காக சொந்த செலவில் தூர்வாரினேன். குடகனாற்று தண்ணீரில் பொதுப்பணித்துறையினர் அரசியல் செய்கின்றனர்’ என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கன்னிவாடி ஒன்றியச் செயலாளர் சக்திவேல் கூறுகையில், ‘கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்கத்தை தூர்வார ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் பங்கு போடுவதில் ஏற்பட்ட பிரச்னையால், ரூ.9 லட்சம் செலவு செய்ததாக கணக்கு காண்பித்துள்ளனர். நீர்த்தேக்கம் புதர்மண்டிக் கிடக்கிறது.இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அரசியல் தலையீடு காரணமாக நீர்த்தேக்கத்தை முழுமையாக தூர்வார முடியவில்லை. கலெக்டர் உத்தரவின்பேரில் கடந்த வாரம் நீர்த்தேக்கத்தை பார்வையிட்டு பராமரிப்புக்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்’ என்றார். 


Tags : Nayodai Reservoir ,Kanniwadi ,storms ,Nivar , Nayodai Reservoir in Kanniwadi, which has been continuously raining due to Nivar and Purevi storms.
× RELATED கன்னிவாடி வாரச்சந்தையில் ரூ.10 கட்டணத்தில் மலிவு விலை உணவகம்