கொரோனா கட்டுப்பாடுகளால் சபரிமலையில் குறைந்த பக்தர்கள் கூட்டம் : அனுமதி 5 ஆயிரம்.... வருவதோ ஆயிரம்... வெறிச்சோடிக் கிடக்கும் நிலக்கல் பார்க்கிங்

கம்பம்: கேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டு நிபந்தனைகளால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 5 ஆயிரம் பேருக்கு அனுமதி கொடுத்தாலும், ஆயிரம் பேர் வரை மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. இதனால், நிலக்கல் பார்க்கிங் வெறிச்சோடிக் கிடக்கிறது. அப்பகுதியில் ஓட்டல்களும் வியாபாரமின்றி உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.கேரள மாநிலம், சபரிமலையில் அய்யப்பன் கோயிலில் கடந்த நவம்பரில் நடை திறக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு விதித்துள்ளது. இதன்படி, தினசரி ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

இல்லாவிடில் நிலக்கல்லில் ரூ.625 கட்டி ஆன்ரோஜன் சோதனை செய்ய வேண்டும். இதில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.கடந்த டிச.10 தேதியிலிருந்து ஆயிரமாக இருந்த பக்தர்கள் எண்ணிக்கையை இரண்டாயிரமாக கேரள அரசு உயர்த்தியது. இருப்பினும் கேரள அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், தரிசனத்துக்கு பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இந்நிலையில் நேற்று (டிச.20) முதல் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய கேரள அரசு அனுமதி அளித்தது. ஆனால், சர்வர் பிரச்னை, வெப்சைட் ஓப்பன் ஆகாதது ஆகிய காரணங்களால், ஆன்லைன் தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனிடையே ஒரு வாகனத்தில் வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தால், அக்குழுவில் உள்ளவர்களில் சிலருக்கு வெவ்வேறு தேதிகளில் தரிசனத்துக்காக முன்பதிவு கிடைக்கிறது. இதனால், நாட்கணக்கில் பக்தர்கள் நிலக்கல் பார்க்கிங்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இன்னும் ஐந்து நாளில் மண்டல கால பூஜை தொடங்க உள்ள நிலையில் நிலக்கல்லில் குத்தகைக்கு கடை எடுத்த கடை உரிமையாளர்கள் குத்தகை பணம் கட்ட முடியாமல் புலம்பி வருகின்றனர்.இது குறித்து நிலக்கல்லில் கடை வைத்திருக்கும் செங்கோட்டை கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘வருடம் தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் நிலக்கல் பார்க்கிங், இந்த வருடம் வெறிச்சோடி காணப்படுகிறது. பக்தர்கள் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்தி தேவசம் போர்ட் அறிவிப்பு செய்திருந்தாலும், பக்தர்களுக்கு வெப்சைட் ஓப்பன் ஆகாமல் ஆயிரத்துக்கும் குறைவான பக்தர்களே வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கில் குத்தகைக்கு கடை எடுத்தவர்கள் வியாபாரம் இன்றி தவித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories:

>