தர்மபுரியில் நாயக்கர் கால நடுகற்கள் கண்டுபிடிப்பு

தர்மபுரி: தர்மபுரியில் நாயக்கர் கால நடுகற்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாளையம்புதூர் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் சந்திரமோகன் தலைமையில், சென்னை தொல்லியல் அலுவலர் ரமேஷ், ஆய்வாளர்கள் இம்ரான், இளந்திரையன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். இதில், அப்பகுதியில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த 5 நடுகற்கள் அருகருகே அமைந்துள்ளதை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது: தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சென்றாய பெருமாள் கோயில் வளாகத்திற்கு எதிரே இரண்டு நடுகற்கள் காணப்படுகின்றன. ஒன்றில் ஒரு வீரன் பெரிய வாள் ஒன்றினை தலைக்கு மேல் ஓங்கிய நிலையிலும், மற்றொரு கையில் கேடயத்தை பிடித்தவாறும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நடுகல் சதிக்கல் வகையை சார்ந்ததாகும். அருகில் அமைக்கப்பட்டுள்ள பெண் உருவமானது, ஒரு கையில் குத்திகை சொம்பும், மறு கை மான் முத்திரை போல வித்தியாசமான வடிவில் கட்டப்பட்டுள்ளது.

இதுவரை கண்டறியப்பட்டுள்ள நடுகற்களில் மான் முத்திரையுடன் கூடிய பெண் உருவம் கண்டறியப்படவில்லை. ஆணின் காதுகள் பெரியதாக நீண்டு, அவற்றில் காதணி உள்ள வாரும் காட்டப்பட்டுள்ளன. வீரனுடைய மீசைகள் மேல் நோக்கியவாறு பெரியதாக அமைத்துள்ளன. தலைமுடியானது ரிப்பன் எனப்படும் துணியால் கட்டப்பட்டு கொண்டை போல அமைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் ஆபரணங்களும் நகைகளும் காட்டப்பட்டுள்ளன. அவனது வலது கால் அருகே ஒரு குறுவாள் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. ஆடை மல்யுத்த வீரர்களை போன்று தொடையுடன் உள்ளவாறு அமைக்கப்பட்டு, அதன் கீழ் அலங்கார ஆடை கட்டப்பட்டுள்ளது. இத்தகைய நடுகற்கள் நாயக்கர் காலத்தவை ஆகும். மேலும் அப்பெண் உருவத்தில் மேலாடை, கீழாடை அழகிய கலைநயத்துடன் காட்டப்பட்டுள்ளது. அருகில் அமைக்கப்பட்டுள்ள 2வது நடுகல்லில் ஒரு ஆண் உருவம் மிக அழகாக சிறிய உதடுகளுடன் பார்ப்பதற்கு பெண் உருவம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2வது நடுகல்லில் கையில் தடி போன்ற ஆயுதத்தை, தோளில் சாய்த்து வைத்த வாறும், இடுப்பில் குறு வாளுடனும் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளது. மறு கை கீழே தொங்க விடப்பட்டுள்ளது.

இக்கோயில் அருகில் உள்ள நிலத்திற்கு வெளி பகுதியில் மூன்று நடுகற்கள் காணப்படுகின்றன. முதலாவது நடுகல் ஜல்லிக்கட்டை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கருதலாம்.இதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள நடுகல்,சதிக்கல் வகையைச் சார்ந்ததாகும் இந்நடுகல்லில் உள்ள வீரன் ஒருவன் வலது கையில் மிகப்பெரிய வாளும்,இடது கையில் ஒரு சிறிய வாளுடனும் போருக்கு செல்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.இவ்வீரனின் இடுப்பில் குருவாளும் காட்டப்பட்டுள்ளது.

வீரனின் அருகில் சிறிய அளவிலான பெண் உருவம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது.

பெண் உருவத்தில்  மிக அழகான வகையில் கொண்டை உருவமைப்பு காட்டப்பட்டுள்ளது. மேலும் கழுத்தணி போன்றவை மிக அழகாக தெளிவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் காணப்படும் ஐந்தாம் நடுகல் பன்றி குத்தி பட்டான் கல் வகையை சார்ந்ததாகும். நடுகற்களில் காட்டக்கூடிய கொண்டை அமைப்பு,பெரிய மீசை அமைப்பு போன்றவை நாயக்கர் காலத்தை சார்ந்தவை என வலியுறுத்த கூடியதாக அமைகிறது. இந்நடுகற்களை பராமரிப்பதன் மூலம், நாயக்கர் கால பண்பாடு இப்பகுதியில் இருந்தது என்பதை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் உணர்த்த இயலும். இவ்வாறு பேராசிரியர் சந்திரசேகர் கூறினார்.

Related Stories:

>