×

முறையான பராமரிப்பில்லை!: மதுரவாயல்-வாலாஜா நெடுஞ்சாலை இடையே உள்ள 2 டோல்கேட்களில் பொங்கல் வரை 50% கட்டணம்!: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மதுரவாயல் - வாலாஜா இடையே 2 சுங்கச் சாவடிகளில் பொங்கல் வரை 50% கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையை அடுத்த மதுரவாயல் முதல் வாலாஜா வரை தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள், சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போடும் சாலைகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை காங்கிரஸ் தரப்பில் இல்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் பழுதடைந்த நிலையில் உள்ள மதுரவாயல்-வாலாஜா நெடுஞ்சாலையை பல நாட்களாக ஏன் சரிசெய்யவில்லை? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அச்சமயம் இன்னும் 10 நாட்களுக்குள் சாலை முழுவதும் பழுதுபார்க்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, 2 வாரத்துக்கு மதுரவாயல் - வாலாஜா இடையே சாலையில் 2 சுங்கச்சாவடிகளில் 50% கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம் உத்தரவிட்டும் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தான் வேலூர் சென்றபோது பார்த்ததாக சத்தியநாராயணன் நெடுஞ்சாலைத்துறை ஆணைய வழக்கறிஞரிடம் பதிலளித்தார். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை எப்போது சரி செய்வீர்கள்? பணி எப்போது முழுமைபெறும் என கேள்வி எழுப்பினர். சாலைகளில் கண்துடைப்புக்காக மட்டுமே பராமரிப்பு பணி நடைபெற்றதாக குற்றம்சாட்டி மதுரவாயல் - வாலாஜா இடையே 2 சுங்கச் சாவடிகளில் 50% கட்டணம் வசூலிக்கும் உத்தரவு பொங்கல் வரை நீட்டிக்கப்படுவதாக நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.


Tags : Pongal , Madurai-Walaja Highway, Tolkien, 50% toll, iCourt
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா