×

உடன்குடி அனல்மின்நிலையம் அருகே தருவைகுளத்திற்கு தண்ணீர் வரும் நீர்வழித்தட கால்வாய் அடைப்பு: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

உடன்குடி: உடன்குடி அனல்மின்நிலையம் பின்புற சுற்றுச்சுவர் பகுதியில் தருவைகுளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் குளம் நிரம்புவதில் சிக்கல் நீடிப்பதால் குடிநீருக்கு பொதுமக்கள் திண்டாடும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் உள்ளது.உடன்குடி பகுதியில் அனல் மின்நிலையம், துறைமுகம் அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. அனல் மின்நிலையம் கடல் நீர்மட்டத்தை விட தாழ்வாக இருப்பதால் சுமார் 8 அடிக்கும் மேலாக உயர்த்தப்பட வேண்டியதுள்ளது.
இதனையடுத்து உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள குளங்களிலிருந்து இரவு, பகலாக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மண் கொண்டு வந்து நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக அனல் மின்நிலைய வளாகம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனையடுத்து பல மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது. வளாகத்தினுள் தண்ணீர் வற்றியதையடுத்து மீண்டும் அனல் மின்நிலைய பகுதிகளில் உள்ள காலி நிலங்களில் மண் கொண்டு தரையை உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர்.

அனல்மின் நிலைய பின்புற சுற்றுச் சுவரையொட்டிய பகுதிகளில் இரவு, பகலாக மணல் அள்ளுவதற்காக தனியாக மணற்சாலைகள் அமைத்திருந்தனர். இதனால் திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளம் மறுகால் பாய்ந்து குலசேகரன்பட்டினம் தருவைகுளத்திற்கு தண்ணீர் வரும் நீர்வழித்தடங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. தற்போது மறுகால் பாயும் எல்லப்பநாயக்கன் குளத்திலிருந்து தண்ணீர் கல்லாமொழி பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதியில் தேங்கி கிடக்கிறது. மேலும் ஆங்காங்கே அதிகளவில் பள்ளம் தோண்டி மணல் எடுத்ததால் எங்கு பள்ளம், எங்கு தரை என தெரியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி கிடக்கும் நிலையில் அங்கு விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் அப்பகுதிகளுக்கு செல்லவே அஞ்சுகின்றனர்.

 மேலும் குளம் நிரம்புவதில் சிக்கல் நீடிப்பதால் குடிநீருக்கு பொதுமக்கள் திண்டாடும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் உள்ளது.இதுகுறித்து விவசாயிகள், சமூகஆர்வலர்கள், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். இதனையடுத்து நீர்வழித்தடங்களை மறித்து அமைத்திருந்த சாலைகள், மணல் தடுப்புகளை அந்த பகுதி விவசாயிகள், பொது நலவிரும்பிகள் இணைந்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை ஓரளவு செய்து முடித்திருப்பதால் சிறிதளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து அனல்மின் நிலைய வளாக பின்புற பகுதியில் உள்ள தருவைகுளத்திற்கு வரும் நீர்வழித்தடத்தை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : waterway canal ,Daruvaikulam ,Udankudi Thermal Power Station , Closure of waterway canal to Daruvaikulam near Udankudi Thermal Power Station: Risk of shortage of drinking water
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு