சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கைகோர்ப்பு எதிரொலி : மக்களுக்கான வாக்குறுதியை நிறைவேற்றுங்க! உத்தவ் தாக்கரேவுக்கு சோனியா பரபரப்பு கடிதம்

மும்பை, :ஆட்சி அதிகாரத்தில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கைகோர்த்து உள்ளதாக எழுந்த புகாரையடுத்து, மகாராஷ்டிரா முதல் உத்தவ் தாக்கரேவுக்கு சோனியா பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. ஆட்சி அதிகாரத்தில் சிவசேனா, தேசியவாதக காங்கிரஸ் கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால், உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியாக போட்டியிட தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இது, கூட்டணியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். சோனியாவின் கடிதம் ஆளும் சிவசேனா தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. சோனியாவின் இந்த கடிதத்திற்கு உத்தவ் தாக்கரே இன்னும் பதிலளிக்கவில்லை என்றாலும், கூட்டணியின் பொதுவான குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில் வரும் ஆண்டுகளில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சிவசேனா அறிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக, காங்கிரஸ் தலைவர்கள் அசோக் சவான், விஜய் வடதிவர் ஆகியோர் சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்’ என்றார். இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ‘முதல்வருக்கு சோனியாகாந்தி எழுதிய கடிதம்,  காங்கிரஸ் கட்சிக்குள்ளோ அல்லது மாநிலத் தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகவோ இருக்கலாம். கொரோனா ஊரடங்கால் பல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. உண்மை என்னவென்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

>