தேவேந்திர குல வேளாளர் பெயர் விவகாரம் அலங்காநல்லூரில் இருதரப்பு மோதல்: போலீஸ் தடியடி

அலங்காநல்லூர்:  அலங்காநல்லூரில் இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

7 உட்பிரிவினரைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் குறிப்பிட மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அண்மையில் அறிவித்தார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் தங்கள் சமூகத்தின் பெயரை மற்றொரு சமூகத்தினர் பயன்படுத்த பரிந்துரை செய்த தமிழக அரசை கண்டித்து ஒரு சமூக அமைப்பினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மற்றொரு சமூக கட்சியினர் சிலர் அங்கு வந்தனர். அவர்கள், ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் இரு தரப்பிற்கும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது சமூக கட்சியினர்  திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது கற்களை வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஜெயலட்சுமி என்ற பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ்  ஒருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். தாக்குதல் நடத்திய 20க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>