×

ஆஸ்திரேலியாவுடன் 2வது டெஸ்ட் இந்திய அணியில் ராகுல், கில், பன்ட்? சாஹா, பிரித்விக்கு கல்தா

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஷுப்மான் கில், ரிஷப் பன்ட் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், அடுத்து நடந்த டி20 தொடரை 2-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது. அடுத்து இரு அணிகளும் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் மோதுகின்றன.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் (பகல்/இரவு ஆட்டம்), ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது. முதல் 2 நாள் ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தி இருந்த இந்திய அணி, 2வது இன்னிங்சில் யாருமே எதிர்பாராத வகையில் 36 ரன்னில் சுருண்டு படுதோல்வியைத் தழுவியது. முன்னணி பேட்ஸ்மேன்கள் உட்பட ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை தாண்டாதது மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும், சொந்த காரணங்களுக்காக கேப்டன் கோஹ்லி நாடு திரும்புவது இந்திய அணிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிச. 26ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் சொதப்பிய விரித்திமான் சாஹா, 2 இன்னிங்சிலும் ஏமாற்றமளித்த தொடக்க வீரர் பிரித்வி ஷா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷுப்மான் கில், ரிஷப் பன்ட்டுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்தும் வகையில் கே.எல்.ராகுலும் சேர்க்கப்பட உள்ளார்.

கையில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக புதுமுக வேகங்கள் முகமது சிராஜ் அல்லது நவ்தீப் சைனி இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். சிராஜ் இந்தியா ஏ அணிக்காக 6 முறை 5 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளதால் மெல்போர்ன் டெஸ்டில் அவர் அறிமுக வீரராகக் களமிறங்கும் வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நடந்த 2 பயிற்சி ஆட்டங்களிலும் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஆஸி.க்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி அசத்திய தமிழக வேகம் ‘யார்க்கர் கிங்’ நடராஜனை டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Tags : Rahul ,Gill ,squad ,Punt ,India ,Australia ,Kalta ,Prithvi ,Saha , Rahul, Gill, Punt in 2nd Test India squad with Australia? Saha, Kalta to Prithvi
× RELATED நீலகிரியில் ராகுல் காந்தி வந்த...