×

மேற்கு வங்க பிரமாண்ட பேரணியில் அமித்ஷா பேச்சு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்

கொல்கத்தா: ‘மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அரசியல் வன்முறை, ஊழல், வங்கதேசத்தினர் ஊடுருவலுக்கு முடிவு கட்ட விரும்புகின்றனர்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜவின் முக்கிய தலைவருமான அமித்ஷா, மேற்கு வங்கத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது தலைமையில் நேற்று முன்தினம் நடந்த பொதுக் கூட்டத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரசின் மாஜி அமைச்சரான சுவேந்து அதிகாரி மற்றும் 9 எம்எல்ஏக்கள், ஒரு எம்பி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பாஜ.வில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து, அமித்ஷா நேற்று தனது 2வது நாள் சுற்றுப்பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்திற்கு சென்ற அமித்ஷா, அங்குள்ள ரவீந்திர பவனில் ரவீந்திரநாத் தாகூருக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், பிர்பூம் மாவட்டம், போல்பூர் நகரில் நடந்த பிரமாண்ட சாலைப் பேரணியில் பங்கேற்றார். இதில், ஆயிரக்கணக்கான பாஜ தொண்டர்கள் பங்கேற்றனர். பேரணியில் அமித்ஷா பேசியதாவது:
சாலைப் பேரணியில் இது போன்ற கூட்டத்தை என் வாழ்நாளில் பார்த்தில்லை. இந்த கூட்டமே மம்தா அரசுக்கு எதிரான மக்களின் கோபத்தை பிரதிபலிக்கிறது. மோடி அரசு மீதான நம்பிக்கையை காட்டுகிறது. மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இங்கு அரசியல் வன்முறை உச்சகட்டத்தில் உள்ளது. திரிணாமுல்லின் வன்முறையால் 300க்கும் மேற்பட்ட பாஜ தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது போன்ற அரசியல் வன்முறை, ஊழல், வங்க தேசத்தினர் ஊடுருவலுக்கு முடிவு கட்ட மக்கள் விரும்புகிறார்கள்.

திருப்திபடுத்தும் அரசியலை நம்பும் திரிணாமுல்லால் வங்கதேசத்தினர் ஊடுருவதை தடுக்க முடியாது. அது பாஜ.வால் மட்டும்தான் முடியும். விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதாக கூறும் மம்தா, இங்குள்ள விவசாயிகள் மத்திய அரசின் திட்டத்தினால் கிடைக்கும் பலன்களை பெற விடுவதில்லையே ஏன்? இதுதான் கூட்டாட்சி தத்துவத்திற்கு தரும் கவுரவமா? எங்களை வெளியாட்கள் என்கிறார் மம்தா. ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றொரு மாநிலத்துக்கு செல்ல முடியாத ஒரு நாட்டை மம்தா பானர்ஜி விரும்புகிறாரா? இத்தகைய பழமைவாத சிந்தனையை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கொரோனா பாதிப்புகள் முழுமையாக சரியானதும் குடியுரிமை சட்டம் முழுமையாக அமலுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை
வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகள் குறித்து அமித்ஷா கூறுகையில், ‘‘மீண்டும் விவசாயிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஓரிரு நாளில் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச உள்ளார். விரைவில் தீர்வு எட்டப்படும்,’’ என்றார்.

Tags : Amitsha ,speech ,West Bengal Grand Rally , Amit Shah's speech at the West Bengal Grand Rally People expect change
× RELATED வாய்ப்பு கேட்ட விஜயதரணி காத்திருக்க சொன்ன அமித்ஷா