×

அரசு வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தில் 63 இருளர் குடும்பங்கள் தேர்வு

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் முழுவதும் கிராம பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு உள்ள பல கிராமங்களில் ஏராளமான இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியின் மூலமாக வீடு கட்டி கொடுக்கும் திட்டம் தற்போது செயல்முறையில் உள்ளது. மிகவும் வறிய நிலையில் காணப்படும் இந்த இருளர் குடும்பத்தினர் தற்போது ஒவ்வொரு கிராமங்களிலும் ஒதுக்குப்புற பகுதிகளில் சிறுசிறு கொட்டகைகள் அமைத்து குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு வீடுகளை கட்டித்தர சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு விதிமுறைகளின்படி வீடு கட்டி கொடுக்க சரியான பயனாளிகளை தேர்வு செய்து வருகின்றனர். அதன்படி, தற்போது 63 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒன்றியத்திற்கு உட்பட்ட வெடால், அமைந்தகரணை, புத்திரன்கோட்டை, வன்னிய நல்லூர், சிறுநகர், தண்டலம், மழுவங்கரணை ஆகிய கிராமங்களில் வசிக்கும் தகுதியுள்ள 63 பயனாளிகள் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு கட்டிக்கொள்ள ரூ.3 லட்சத்து பத்தாயிரம் வழங்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர். இதேபோன்று, தகுதியுள்ள இருளர் இன மக்கள் இருப்பின் அவர்கள் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களை வேலை நாட்களில் சந்தித்து வீடுகள் ஒதுக்கீடு பெறலாம் என தெரிவித்துள்ளனர்.

Tags : families , 63 dark families selected in government housing scheme
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...