×

கிளை சிறையில் கைதி திடீர் மரணம்: போலீசாரை கண்டித்து கிராம மக்கள் மறியல்; பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் கிளை சிறையில் விசாரணை கைதி இறந்ததால், போலீசாரை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிப்பட்டு அருகே கர்லப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். திக கட்சி மாவட்ட அமைப்பாளர். இவரது மகன் சந்திரபோஸ்(32) தனியார் பள்ளி ஆசிரியர். இவருக்கு பள்ளிப்பட்டை சேர்ந்த பத்ரைய்யா என்பவரின் மகள் திவ்யா(23) என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லாததால், திவ்யாவை கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி திவ்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக திவ்யாவின் தந்தை பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தனது மகளை அவரது கணவர், மாமியார் மாமனார், மைத்துனர் ஆகியோர் குழந்தைகள் இல்லை என்று துன்புறுத்தி தொடர்ந்து கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த திவ்யாவின் கணவர் சந்திரபோஸ், அவரது தந்தை பெருமாள், தம்பி வீர பிரதாப் சிங் ஆகிய 3 பேரை கைது செய்து திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

திருமணமான இரண்டு ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெருமாளுக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை போலீசார் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இளம்பெண் தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் முறையான விசாரணை மேற்கொள்ளாமல், இறந்த பெண்ணின் கணவர், மாமனார், மைத்துனர் ஆகியோரை கைது செய்த சம்பவத்தால், மன உளைச்சலுக்கு ஆளான பெருமாள் சிறையில் இருந்தபோது உடல்நலக் கோளாறு ஏற்பட்டு இறந்ததாக கூறி அவர்கள் கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை போலீசாரை கண்டித்து கர்லப்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பள்ளிப்பட்டு - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து திருத்தணி டி.எஸ்.பி. குணசேகரன், ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்திரகுமார் பள்ளிப்பட்டு உதவி காவல் ஆய்வாளர் சதாசிவம் உட்பட போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். அப்போது, தற்கொலை சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று  போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்று சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பெண் தற்கொலை சம்பவத்தில் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது மாமனார் இறந்த சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : death ,prisoner ,Stir ,Pallipattu , Sudden death of prisoner in branch jail: Villagers protest against police; Stir near Pallipattu
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...