×

புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் கோயில் குளத்தில் விடப்படும் எண்ணெய் தொழிற்சாலை கழிவுகள்: மக்கள், கால்நடைகளுக்கு ஆபத்து

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் செய்யும் தொழிற்சாலை, சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் 2 தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இந்த கிராமத்தை சுற்றி உள்ளன. மேலும் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி 2 வார்டு ராமன் சேரி கண்டிகை பகுதியில் தனியார் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலைகளில் இருந்து அடிக்கடி வெளியேறும் கருப்பு துகள்களால் அவ்வழியாக செல்லும் மக்கள் மீது படுவதும் அருகே உள்ள கோயில் குளத்தில் படிவதாலும் நீர் மாசடைகிறது. இந்த நீரை கால்நடைகளும் பொதுமக்களும் அருந்துவதால் பல தொற்று நோய்கள்  ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகாரளித்தனர். புகாரின்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அஸ்வினி சுகுமாரன், துணைத் தலைவர் எல்லப்பன் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு சிப்காட் பகுதியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மேற்கண்ட தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அஸ்வினி சுகுமாறன் இடம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தனியார் சமையல் எண்ணெய் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கருப்பு துகள்கள், கோயில் குளத்திலும், செடி, கொடி, வழிப்போக்கர்கள் மீதும் படிவதால் சிலருக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது என்று கூறிவிட்டு இதனை நிர்வாகத்திடம் கேட்க வேண்டுமென அனைவரும் தொழிற்சாலை முன்பு முற்றுகையிட முயன்றனர்.
இதனை அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மக்களுக்கு பாதுகாப்பளித்துள்ளனர். அதன்பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அஸ்வினி சுகுமாரன் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் கண்ணனை சந்திக்க வேண்டும் என்று கூறிய பின்பு உடனடியாக தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் கண்ணன் மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.  

அப்போது மக்கள் தொழிற்சாலையின் பின்புறத்தில் உள்ள செடி, கொடிகள் மற்றும்  கோயில் குளத்தில் படிந்துள்ள கருப்பு துகள்கள் பொதுமக்கள் காண்பித்தனர். இதே போன்று நாங்கள் சுவாசித்தால் எங்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வந்து உயிரிழக்க நேரிடும் என்று அவரிடம் எடுத்துரைத்தனர். அதற்கு நிர்வாகம் உடனடியாக மேற்கண்ட குளம் கோயில் வளாகம், குளம் உள்ளிட்டவைகளை சுத்தம் செய்வதோடு கருப்பு துகள்கள் வராத வண்ணம் சரி செய்யப்படும் என்றும் இனிமேல் எந்த கருப்பு துகள்களும் வெளியே வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமாறன், துணை தலைவர் எல்லப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் இடம் வாக்குறுதி அளித்த பின்னர் கூட்டம் கலைந்து சென்றது. இந்த சம்பவம் புதுகும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : temple pond , Oil factory waste dumped in temple pond in Pudukummidipoondi panchayat: Danger to people and livestock
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...