×

குஜராத், தெலங்கானா உட்பட 4 மாநில காங். தலைவர்கள் மாற்றம்: சோனியா அதிரடி

புதுடெல்லி: கொரோனா ஊரடங்குக்குப் பிறகு முதன்முறையாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் நேரடியாக ஆலோசனை நடத்தி வருகிறார் சோனியா காந்தி. கட்சியின் உள்கட்டமைப்பை மாற்றியமைக்கும் பொருட்டு புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியும் உடல்நிலை சரியில்லாததால் கட்சிப்பணிகளை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இதனால், புதிய கட்சித் தலைவரை நியமிக்க வேண்டும் காங்கிரசின் மூத்த தலைவர்கள் 23 பேர் கடந்த ஆகஸ்ட்டில் கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரும் சர்ச்சையான இந்த விவகாரத்தால், ஆகஸ்ட் மாதத்தில் சோனியா அனைவருடனும் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். தற்காலிக தலைவராக சோனியா காந்தியே செயல்பட வேண்டும் எனவும், புதிய தலைமையை விரைவில் அறிவிப்பது எனவும் அந்த கூட்டத்தில் முடிவானது. இந்நிலையில், அதிருப்தி தலைவர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் நேரடியாக தனது இல்லத்தில் நேற்று முன்தினம் சோனியா ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, கட்சியின் உள்கட்டமைப்பை மாற்றியமைக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக, தெலங்கானா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமிக்க சோனியா முடிவு செய்துள்ளார். இவர்களில் குஜராத் மாநில தலைவர் அமித் சவுடாவும், தெலங்கானா மாநில தலைவர் உத்தம் குமார் ரெட்டியும் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஜிதேந்திர சிங்கை அசாமுக்கும், தரிக் அன்வரை கேரளாவுக்கும் பொதுச் செயலாளார்களாக நியமித்துள்ளார் சோனியா காந்தி. சனிக்கிழமையன்று மகாராஷ்டிரா மாநிலத் தலைமைக்கு பாலசாகேப் த்ரோட்டை நியமனம் செய்தார். இதனால், மீண்டும் கட்சி தலைமையை ராகுல் ஏற்பாரா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆலோசனை தொடர்ச்சியாக 10 நாட்கள் நடைபெற உள்ளதால், காங்கிரசில் தொடர்ந்து மேலும் பல மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது.

Tags : State ,Telangana ,Leaders ,Gujarat , 4 states including Gujarat and Telangana Cong. Leaders change: Sonia Action
× RELATED பாஜக வெற்றி பெற்றால் ஒடிசாவை நம்பர்...