நாடு முழுவதும் விநியோகம் தொடங்காத நிலையில் இந்திய தடுப்பூசிக்கு 12 நாடுகள் விருப்பம்; நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் தடுப்பூசி விநியோகம் தொடங்காத நிலையில், இந்திய தடுப்பூசிக்கு 12 நாடுகள் விருப்பம் தெரிவித்து மத்திய அரசிடம் உதவிகளை கோரியுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டிய நிலையில், தடுப்பூசி விநியோகத்திற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக நடந்த உயர் மட்ட அமைச்சர்கள் குழு கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் கே.பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தடுப்பூசி பரிசோதனைகள், தடுப்பூசி உற்பத்தியாளர் மற்றும் தடுப்பூசி மக்களுக்கு கிடைப்பது மற்றும் பராமரித்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது ஷர்ஷஅ வர்தன் பேசுகையில், ‘பரிசோதனை அதிகரிப்பு, கண்டறிதல் மற்றும் சிறப்பான சிகிச்சை போன்ற கொள்கைகளால் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்பட்ட போதும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனாவின் புதிய வேகம் எதுவும் கண்டறியப்படவில்லை. இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள (சுமார் 30 கோடி) மக்களை விரைவில் தடுப்பூசி சென்றடைய துரித தடுப்பூசி திட்டம் ஒன்று அவசியம்.

தொற்றுநோயின் வளர்ச்சி விகிதம் இரண்டு சதவீதமாகக் குறைந்துள்ளது. இறப்பு விகிதம் உலகின் மிகக் குறைந்த அளவு 1.45 சதவீதமாக உள்ளது. நோயாளிகளின் மீட்பு விகிதம் 95.46 சதவீதமாகக் குறைந்துள்ளது’ என்றார். மேலும், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் கே.பால் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் தடுப்பூசி கேட்டு 12 நாடுகள் இந்தியாவிடம் உதவி கோரியுள்ளன. இதுபோன்ற நாடுகளுக்கு உதவுவதற்கும், கூடுதல் தடுப்பூசி தயாரித்து விநியோகம் செய்வதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன’ என்றார்.

Related Stories:

>