×

குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டின..! விதவிதமான கேக் தயாரிப்பு பணிகள் தீவிரம்

நாகர்கோவில்: குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை களை கட்டி உள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு வரமுடியாமல் தவித்த பொதுமக்கள், கடந்த செப்டம்பரில் இருந்து தான் வழிபாட்டு தலங்களுக்கு வருகிறார்கள். இப்போது தான் மெல்ல, மெல்ல சகஜ நிலை வந்து கொண்டு இருக்கிறது. கொரோனாவின் தாக்கம் குறைந்து வழிபாட்டு தலங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் வருகிற 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் வர்ணம் பூசுதல், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வீடுகளிலும், தேவாலயங்களிலும் இயேசு கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளன.

வண்ண, வண்ண ஸ்டார்களும் மின்னொளியில் ஜொலிக்கின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாகர்கோவிலில் கேக் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பிளம்கேக்குகள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.  கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே இருக்கின்ற நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கேக் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதற்காக பேக்கரிகளில் இரவு, பகலாக கேக் தயாரிப்பு பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பிளம் கேக்,  பட்டர் பிளம் கேக், உட்பட பல்வேறு வகையான பிளம் கேக்குகளும், வெண்ணிலா உட்பட பல வகையான கேக்குகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக ராக் பிளம் மற்றும் பட்டர் பிளம் கேக்குகள்  புதிய முறையில் மக்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கால் கிலோ முதல் ஒரு கிலோ, 5  கிலோ வரை  கேக் தயாரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எளிதாக வாங்கும் வகையில் பல்வேறு விலையில் இவை விற்பனைக்கு வந்துள்ளன.

குமரியில் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான பிளம் கேக்குகள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. ஏராளமானோர் ஆன்லைன் மூலமும் வாங்குவதற்கு ஆர்டர் செய்து வருகின்றனர் என பேக்கரி உரிமையாளர்கள் சிலர் தெரிவித்தனர். பல்வேறு புதுமைகள் இருந்த போதிலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கேக் விற்பனை மந்த நிலையிலேயே உள்ளது என்றும்,  கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நல்ல வியாபாரம் இருந்தது என்றும் தெரிவித்தனர். பேக்கரிகளுக்கு நேரடியாக வருவது குறைந்து பலர் ஆன்லைன் மூலம் வாங்குவதற்கு புக்கிங் செய்து வருவதாகவும்  தெரிவித்தனர். இதற்கிடையே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக புதிய ஆடைகள் வாங்க ஜவுளி கடைகளில் மக்கள் அதிகளவில் வர தொடங்கி உள்ளனர். நாகர்கோவிலில் உள்ள பிரபல ஜவுளி கடைகளில் சனிக்கிழமையான நேற்று மாலை கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று காலை முதலும் கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Tags : celebrations ,Kumari , Christmas celebrations weed out in Kumari ..! Intensity of different cake preparation tasks
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...