உறைபனி இல்லாததால் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: ஊட்டியில் உறைப்பனி இல்லாததால் ரோஜா பூங்காவில் மலர்கள் அனைத்தும் கருகாமல் பூத்து குலுங்குவதால் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் நீர் பனி விழத்துவங்கும். தொடர்ந்து ஒரு மாத காலம் நீர் பனிபொழிவு காணப்படும். நவம்பர் மாதம் இறுதி வாரத்திற்கு மேல் உறைபனி விழும். டிசம்பர் இரண்டாவது வாரத்திற்கு மேல் கடும் உறைப்பனி காணப்படும். இதனால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான புல் தரைகள், தாவரங்கள் மற்றும் செடி கொடிகள் காய்ந்து போய்விடும். குறிப்பாக, ஊட்டி பூங்காக்களில் உள்ள மலர் செடிகள், அலங்கார செடிகள் மற்றும் புற்கள் பாதிக்கும்.

பனியில் இருந்து காக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகளை ஊழியர்கள் மூடி வைப்பார்கள்.இருப்பினும், மலர் செடிகள் கருகிவிடும். குறிப்பாக, ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா மலர்கள் மற்றும் செடிகள் இந்த உறைப்பனிக்கு தாக்கப்பிடிக்காது. மலர்கள் கருகி விடும், செடிகளில் உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து விடும். இதனால், டிசம்பர் மாதத்திற்கு மேல் ஏப்ரல் மாதம் வரை ரோஜா பூங்காவில் மலர்களை காண்பது மிக அரிது. ஆனால், இம்முறை மழை மற்றும் மேக மூட்டம் காரணமாக இது வரை உறைப்பனி விழாமல் உள்ளது. நீர் பனி மட்டுமே அவ்வப்போது கொட்டுகிறது.

இதனால், ரோஜா பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளிலும் உள்ள செடிகளில் தற்போது பல வண்ணங்களில் ரோஜா மலர்கள் காண முடிகிறது. கோடை சீனுக்காக தாவரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு மலர்களையே காண முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Related Stories:

>