×

தோவாளை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பக்க சுவர் இல்லாத ஓடை: விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

ஆரல்வாய்மொழி: தோவாளை, விசுவாசபுரம் அருகே நாகர்கோவில் ஆரல்வாய்மொழி  நெடுஞ்சாலையில் பக்க சுவர் இல்லாத ஓடையால் விபத்துக்குள்ளாகும் வாகனங்களால்  பரபரப்பு   நாகர்கோவில் - ஆரல்வாய்மொழி தேசிய  நெடுஞ்சாலையில்  தோவாளை, விசுவாசபுரம் அருகே சாலை ஓரமாக முப்பாத்து ஓடை  செல்கிறது. இந்த ஓடையானது தோவாளை சானலில் இருந்து பிரிந்து பண்டாரபுரம்  வழியாக வந்து தோவாளை வட்டார போக்குவரத்து அலுவலகம் பின் புறமாக வந்து  பின்னர் நெடுஞ்சாலை ஓரமாக செல்கிறது. இந்த ஓடை சாலையிலிருந்து பல அடி  பள்ளத்தில் உள்ளது. இந்நிலையில் சாலையின் ஓரத்தில் செல்கின்ற இந்த ஓடையில்  பக்க சுவர்கள் இல்லாமல் செடிகளும் புதர்களும் மண்டி காணப்படுகிறது. இதனால்  இரவு நேரங்களில் இச்சாலையில் செல்கின்ற வாகனங்கள் எதிரே வருகின்ற  வாகனத்தின் வெளிச்சத்தில் அந்த வாகனத்திற்கு வழி விடுகின்ற போது  ஓடையில் தவறி விழும் சம்பவங்கள் தொடர்ந்து  நடந்து வருகின்றன.

 கடந்த சில மாதங்களுக்கு முன்பு இச்சாலையில் வந்த மினி  டிம்போ மற்றும் இரு சக்கர வாகனங்கள் எதிரே வந்த வாகனத்திற்கு  வழிவிடுவதற்காக சாலை ஓரமாக ஒதுங்கிய போது ஓடையில் கவிந்தன. அப்போது  ஓடையில் தண்ணீர் சென்றதால் மினி டிம்போ டிரைவர், மற்றும் இரு சக்கர  வாகனத்தை ஓட்டியவர்கள் அதிஷ்டவசமாக எந்த வித காயமும் இல்லாமல் உயிர்  தப்பினர். இது போன்று கடந்த வாரம் நாகர்கோவிலில் இருந்து தோவாளை நோக்கி வந்த  டிப்பர் லாரியானது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்டு சாலை ஓரமாக  ஒதுங்கிய போது பக்க சுவர் இல்லாத காரணத்தால் ஓடையினுள் பாய்ந்தது. அப்போது  அவ்வழியாக வந்த வாகனத்தில் வந்தவர்கள்வாகனத்தினை நிறுத்தி ஓடையில் தவித்த  ஓட்டுனரை மீட்டனர்.

இதனிடையே ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல்  கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாகனத்தினை மீட்க  நடவடிக்கை எடுத்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நாகர்கோவில் - தோவாளை நெடுஞ்சாலையில் பல கிலோ  மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இந்த  முப்பாத்து ஓடையானது வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே இருந்து வெள்ளமடம் வரை நெடுஞ்சாலை ஓரமாக செல்வதாலும் இந்த ஓடையில் பக்க  சுவர் இல்லாத காரணத்தினாலும் அடிக்கடி விபத்து நடப்பதால் உடனே  பொதுபணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு  சாலைக்கும்-ஓடைக்கும் இடையே உள்ள புதர்களையும், செடிகளையும் அகற்றி உடனே  பக்கசுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  வைக்கின்றனர்.

Tags : National Highway ,Towala: Accident , தோவாளை, நெடுஞ்சாலையில், பக்க சுவர், இல்லாத ஓடை
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு அமைக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு