கோத்தகிரி தேயிலை தோட்டங்களில் கூட்டமாக உலா வரும் காட்டு மாடுகள்: பொதுமக்கள் பீதி

ஊட்டி: கோத்தகிரியில் மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் கூட்டம் கூட்டமாக வலம் வரும் காட்டு மாடுகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. காட்டு யானை, காட்டு மாடுகள், பன்றிகள், கரடிகள், சிறுத்தை, புலி உட்பட அனைத்து வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, காட்டு மாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டன. இவை காடுகளில் வாழ்வதைவிட மக்கள் வசிக்கும் பகுதியில்தான் அதிகம் வசிக்கின்றன. விவசாய நிலங்கள் மற்றும் தேயிலை கூட்டங்களில் கூட்டமாக செல்கின்றன.

கோத்தகிரி, குன்னூர் மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளில் இந்த காட்டு மாடுகளின் அதிகமாக உலா வருகின்றன. இதனால், தேயிலை தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் இவை விரட்டுவதாலும், தாக்குவதாலும் உயிரிழப்பு ஏற்படுகிறது. காட்டு மாடுகளின் பெருக்கத்தால், பெரும்பாலான தொழிலாளர்கள் தேயிலை பறிக்க பணிகளுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். அதேபோல், விவசாயிகளும் வனங்களை ஒட்டிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் காய்கறிகளை பயிரிடுவதை முற்றிலும் தவிர்த்துவிட்டனர். தேயிலை தோட்டங்கள் மற்றும் காய்கறி தோட்டங்களில் வலம் வரும் காட்டு மாடு கூட்டங்களை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை. கோத்தகிரி பகுதியில் நேற்று 50க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் ஒரு தேயிலை தோட்டத்தில் முற்றுகையிட்டதால், தொழிலாளர்கள் பணிகளை செய்ய முடியாமல் போனது. மேலும், அவ்வழியாக பொதுமக்களும் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காட்டு மாடுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>