×

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளிலிருந்து புதிய வகை பறவைகள் வருகை

வேதாரண்யம்: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளிலிருந்து புதியவகை பறவைகள் வந்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகள் இங்கு தங்கி பின் சொந்த நாடுகளுக்கே திரும்பிச் செல்வது வழக்கம். சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச் சிறப்பு சேர்க்கும். மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, ரஷ்யாவிலிருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து வருகை தரும் ஆர்க்டிக்டேன் (ஆலா), இமாச்சல பிரதேசத்திலிருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் என 247 வகைப் பறவைகளும் வந்து செல்கின்றன. இங்கு வரும் 247 வகையான பறவைகளில் 50 வகையான நிலப்பறவைகளும், 200க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது.
இந்த ஆண்டு இந்த சரணாலயத்திற்கு இமாச்சல பிரதேசத்தில் இருந்து 58 ஆண்டுகளுக்கு பிறகு வந்த “ஹிமாலய கிரிபன் கழுகு”, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வரித்தலை வாத்தும் வந்துள்ளது.

தற்போது பறவைகள் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை நிலவுவதால் இந்த சரணாலயத்திற்கு புதிய வரவாக 22 ஆயிரம் கிமீ தொலைவை கடந்து வலசை வரும் குயில் வடிவில் காணப்படும் அமூர் பால்கன் பறவை வந்துள்ளது. இந்த பறவை வடகிழக்கு ரஷியா, சீனாவில் காணப்படும் அமூா் பால்கன் இனம், சைபீரியாவை கடந்து, நாகாலாந்து வழியாக வட இந்திய பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வலசை வரும். இங்கு ஓய்வெடுக்கும் இந்த பறவைகள், மத்திய இந்திய பகுதிவரை வந்து பின்னா் தென்னாப்பிரிக்கா செல்வது வழக்கம். தென்மாநிலங்களுக்கு அரிதாகவே வரும் இந்த பறவைகள், தற்போது கோடியக்கரையில் காணப்படுகின்றன. புயல், மழையின் காரணமாக பருவநிலை மாறுபாடுகளால் அரிய வகை பறவைகள் கோடியக்கரைக்கு வந்துள்ளது என்று மும்பை பறவை ஆராய்ச்சி விஞ்ஞானி பாலச்சந்திரன் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பில் சுமார் ஒரு லட்சம் பறவைகள் வந்தது என தெரிவித்தனர். ஆனால் இந்த ஆண்டு பருவகால நிலை பறவை வரத்திற்கு சாதகமாக இருப்பதால் லட்சக்கணக்கில் வந்துள்ளன. இவைகள் அனைத்தும் வெகு தொலைவில் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன. வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் கோடியக்கரை பம்பு ஹவுஸ் அருகே கண்டுகளிப்பார்கள். அதிக அளவில் பறவைகள் வந்தும் பறவையைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளும் தற்போது பம்ப் ஹவுஸ் அருகே பறவையை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை தவிர்க்க முடியும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags : Kodiakkarai Bird Sanctuary , கோடியக்கரை ,பறவைகள் சரணாலயம், ,புதிய வகை பறவைகள்
× RELATED கோடியக்கரை சரணாலயத்துக்கு 10 லட்சம் பறவைகள் வருகை