×

தடை விதித்தும் தொடருது துயரம் கால்வாய்களை அடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் : அதிகாரிகள் அலட்சியம்

கோவை: கோவை குளங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி வழிகிறது. சுற்றுச்சூழலுக்கு வேட்டு வைக்கும் இதை அகற்றாமல், மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகும் நொய்யல் நீராதாரத்தில், கோவை பகுதியில் 28 குளங்கள் இருக்கிறது. இதில், நகர் பகுதியில் செல்வாம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, முத்தண்ணன்குளம், செல்வசிந்தாமணி, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், சிங்காநல்லூர் குளம் அமைந்துள்ளன. மாநகரின் முக்கிய பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர், இந்த குளங்களில் முழு அளவில் திருப்பி விடப்படுகிறது. இவற்றுடன், பிளாஸ்டிக் கேரிபேக் உள்ளிட்ட கழிவுகளும் சேர்ந்து கலக்கின்றன. இவை, குளங்கள் மட்டுமின்றி, நீர்வரத்து கால்வாய்களிலும் குவியல் குவியலாக அடைத்துக்கொண்டு கிடக்கிறது.

குறிப்பாக, செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி குளங்களில் சாயக்கழிவு மற்றும் வீட்டு சாக்கடை கழிவுகள் பாய்கிறது. இந்த குளங்களின் கரைகளில் காலாவதியான உணவு பொருட்கள் கொட்டப்படுகிறது. பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இங்கு குவிக்கப்படுகிறது. இவை, பல மாதங்களாக அகற்றப்படாமல் கிடக்கிறது. முத்தண்ணன் குளத்திற்கு வழிந்து செல்லும் சாக்கடை கால்வாயில், பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் கேரி பேக், தூக்கி வீசப்பட்ட பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்துபோன வீட்டு உபயோக பொருட்கள், தூக்கி வீசப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் உதிரி பாகங்கள், மர கழிவுகள் என பல வகையான கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இவற்றில், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் உள்ளன.

உக்கடம் பெரியகுளம் கரைப்பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. இதற்காக இந்த குளத்தில் கரையோரம் ஒதுங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டன. இருப்பினும், இக்குளத்திற்கு நீர் கொண்டு வரும் சேத்துமா வாய்க்கால் முழுவதும் பிளாஸ்டிக் கழிவு தேங்கி கிடக்கிறது. இவை, படிப்படியாக உக்கடம் பெரியகுளத்தின் மேற்கு கரையோரம் பாய்கிறது. பிளாஸ்டிக் குவியல் காரணமாக இந்த வாய்க்காலுக்கு வரும் மழைநீர் தடைபடுகிறது.
இதேபோல், சிங்காநல்லூர் குளத்தின் வடக்கு கரைப்பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கழிவு தேங்கி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் கருமை நிறத்தில் குவிந்து கிடக்கிறது. குறிச்சி குளம், செல்வசிந்தாமணி குளமும் விதிவிலக்கு அல்ல. ஏறக்குறைய, மாநகர எல்லைக்குள் உள்ள அனைத்து குளங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. குளங்களுக்கு நீர் கொண்டு வரும் ‘ராஜ வாய்க்கால்’ பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி ‘குப்பை வாய்க்கால்’ என மாறிவிட்டது. வெள்ளலூர் செல்லும் ராஜ வாய்க்கால் பிளாஸ்டிக் கழிவுகளுடன் பல ஆண்டாக அடைபட்டு கிடக்கிறது. இதை கண்டுகொள்வார் யாருமில்லை. துர்நாற்றம் வீசும் இந்த குப்பை கழிவுகளால் குளங்கள் மாசுபடுவதுடன், சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், கோவை மாநகரில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்கிறது. குளங்கள், நீர்வரத்து வாய்க்கால், சாக்கடை கால்வாய், குப்பைமேடு என பல இடங்களில் பறந்து விரிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற யாரும் முன்வருவதில்லை. கோவை மாநகரில் உள்ள 10 குளங்கள் மற்றும் வாய்க்காலில் சுமார் 100 டன் அளவிற்கு பிளாஸ்டிக் கழிவு குவிந்து கிடக்கிறது. இவற்றை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முயற்சிக்கவில்லை. இதர அரசுத்துறையினரும் கண்டுெகாள்ளவில்லை. முறைகேடுகள் தொடர்வதால் நகரில் சுகாதார சீர்கேடு பெருகுகிறது.

இது தொடர்பாக கோவையை சேர்ந்த தன்னார்வலர்கள் கூறியதாவது: சங்கனூர் பள்ளம் வழியாக சிங்காநல்லூர் குளத்திற்கு மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் வருகிறது. இதர நாட்களில் கழிவுநீர் மட்டுமே வருகிறது. இந்த கழிவுநீரில், பிளாஸ்டிக் குப்பை அதிகமாக வருகிறது. சாக்கடை நீரில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது பற்றி அரசுத்துறையினர் யாரும் சிந்திப்பதே இல்லை. குறிப்பாக, பிளாஸ்டிக் பாட்டில்கள், கேரிபேக்குகள் நீர் பாதையை அடைத்து விடுகிறது. அசுத்தமான தண்ணீர் தாழ்வான இடங்களில் வெளியேறுகிறது. இது, குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேட்டை உருவாக்குகிறது.

பிளாஸ்டிக்கை தடுக்க, நீர்வரத்து வாய்க்காலில் இரும்பு ஜன்னல் கொண்ட கேட் அமைக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை, மாதம் ஒரு முறையாவது சேகரித்து அகற்ற வேண்டும். குளம் மற்றும் நீர்வரத்து வாய்க்கால் புதராக மாறி கிடப்பதால், இங்கு பலர் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகின்றனர். கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சி கழிவுகளும் குளக்கரைகளில் கொட்டப்படுகிறது. இதை தடுத்தால்தான், குளங்கள் மாசுபடுவது தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘குளம் மற்றும் நீர்வரத்து வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற, போதிய அளவில் நிதி ஒதுக்கீடு இல்லை. ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள் நடக்கும் குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் மட்டுமே தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. குளக்கரை ஷட்டர் மற்றும் வாய்க்காலில் 6 முதல் 10 அடி ஆழத்திற்கு சேறு, சகதி காணப்படுகிறது. இதற்குள் இறங்கி, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது சவாலாக உள்ளது. இருப்பினும், தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.’’ என்றனர்.

தொடரும் அத்துமீறல்
‘ஸ்மார்ட் சிட்டி’ மேம்பாட்டு பணிகளில் கோவை மாநகராட்சி சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. ஆனால், தூய்மையில் மிக மோசமான நிலையில் இருக்கிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தடுக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்கவில்லை. நகரில், தினமும் 950 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில், பிளாஸ்டிக் கலந்த குப்பை 55 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் கட்டப்பட்ட சாம்பார், சட்னி உள்ளிட்ட உணவுப்பொருட்களை குளக்கரைகளில் தூக்கி வீசுவது வாடிக்கையாகி விட்டது. இந்த அத்துமீறலை தடுத்தால் மட்டுமே குளம் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் அழகுபெறும்.

Tags : Prohibition, grief canals, plastic waste
× RELATED அதிகபட்ச வெப்பத்தில் ஈரோடு 8-வது இடம்